பெண்கள் உலகம்
null

திருமணத்துக்கு தயாராகுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்...

Published On 2024-06-17 03:17 GMT   |   Update On 2024-06-18 08:00 GMT
  • தோற்றத்தில் பிரகாசிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்
  • தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு விட்டாலே பெண்கள் முகத்தில் ஒருவித பூரிப்பு குடிகொள்ளும். 'கல்யாணக் களை' வந்துவிட்டதாக சொல்வார்கள். அந்த பூரிப்பை மணமேடை வரை தக்கவைத்து பொலிவுடன் ஜொலிக்கவும், கட்டுடல் தோற்றத்தில் பிரகாசிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

நீரேற்றம்

திருமண நாள் நெருங்கும்போது உற்சாகம் பெருகும். அது முகத்தில் பிரகாசிக்கவும், சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கவும் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது அவசியமானது. காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது வளர்சிதை மாற்றத்தை தொடங்குவதற்கு வழிவகுக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். செரிமானத்துக்கும் உதவும். உடல் இலகுவாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

உணவுக் கட்டுப்பாடு

உணவோ, உணவு பதார்த்தங்களோ, நொறுக்குத்தீனிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பெரிய தட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய தட்டுகள், கிண்ணங்களை பயன் படுத்தலாம். அது இயல்பாகவே அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்க்க உதவும். திருமணத்திற்கு தயாராவதற்குரிய இலக்குகளை நோக்கி பயணிக்க உதவிடும்.

பாதாம்

தினசரி உணவில் பாதாம் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், ஆன்டி ஆக்சிடென்டுகள் உட்பட 15 அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. முக்கியமாக பாதாம் பருப்பில் காணப்படும் கொழுப்புகள், வைட்டமின் ஈ ஆகியவை சரும நலனை மேம்படுத்தும். இளமையாகவும், துடிப்பாகவும் தோற்றமளிக்க செய்யும். வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுக்கும். நீண்ட நேரம் வயிற்றை முழுமையாக உணர செய்து அதிகம் சாப்பிட அனுமதிக்காது. உடல் எடையை சீராக பராமரிப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும்.

தூக்கம்

உடலுக்குத் தேவையான ஓய்வை வழங்க தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். போதுமான நேரம் தூங்குவது பசிக்கு காரணமான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும். உணவை அதிகம் உண்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும். மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும்.

மன அழுத்தம்

திருமண ஏற்பாடுகளில் முழுக் கவனம் செலுத்துவதும், திட்டமிடுதல்களை மேற்கொள்வதும் மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதனை கட்டுப்படுத்த தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு வரலாம். அவை ஆரோக்கியத்தையும், தோற்றப் பொலிவையும் பராமரிக்க உதவும். மனம் அமைதியாகவும், சருமம் பொலிவாகவும் இருப்பதை உறுதிசெய்யும்.

பொறுமை

உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இலக்குகளை அடைவதற்கு நிதானமும், பொறுமையும் தேவை. மனதை அலைபாயவிடாமல், தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டும். இத்தகைய வழி முறைகளை முறையாக கடைப்பிடிப்பது திருமண நாளில் உங்கள் தோற்றத்தை பிரகாசிக்க வைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியில் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை இணைத்துக்கொள்வது தசையை வலுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஒட்டுமொத்த உடல் வலிமையையும் அதிகரிக்கச் செய்யும். உடல் தோரணையையும் மேம்படுத்தும்.

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பலகாரங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். அது எடை அதிகரிப்பு மற்றும் சரும பிரச்சினைகளை தடுக்க உதவும்.

Tags:    

Similar News