மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு
- மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை.
- வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை.
மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலில் இருந்து வெளியேறுவது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷயமல்ல அது' என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸ் செய்யும், வலிகளையும் குறைக்கும்.
சுகாதாரமான நாப்கின்கள் உபயோகிப்பது, சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தமின்றி இருப்பது போன்றவையும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினமும் இருவேளை குளிப்பது, ரத்தப் போக்கு இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட இடைவெளிகளில் நாப்கின்களை மாற்றுவது, சிறுநீர், மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் அந்தரங்க உறுப்புகளை (சோப் உபயோகிக்காமல்) சுத்தமான தண்ணீர்கொண்டு கழுவுவது, தொடைப் பகுதியையும் அந்தரங்க உறுப்பையும் ஈரமின்றி வைத்துக்கொள்வது… இவை அனைத்தும் மாதவிலக்கு நாள்களில் ஒவ்வொரு பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்.
பிறப்புறுப்புக்குத் தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை இயல்பிலேயே உண்டு என்பதால், அதற்கெனப் பிரத்யேக சோப் அல்லது திரவம் உபயோகிக்கத் தேவையில்லை. உபயோகித்ததும் தூக்கியெறியக்கூடிய சானிட்டரி நாப்கின்கள், துவைத்து மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகள், டாம்பூன்கள், மென்ஸ்ட்ருவல் கப் என எதை வேண்டுமானாலும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம்.
எதை உபயோகிப்பதானாலும், அதிகபட்ச சுகாதாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள், கப் போன்றவற்றை முறையாகச் சுத்தப்படுத்தியே உபயோகிக்க வேண்டும்.
ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கொரு முறையும் நாப்கினை மாற்ற வேண்டும். மீண்டும் உபயோகிக்கும் காட்டன் பேடுகளை லேசான உப்பு கலந்த குளிர்ந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். `பொதுவாக உள்ளாடைகளையே வெந்நீரில்தானே துவைத்து உபயோகிக்கச் சொல்வார்கள்…
நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் உபயோகிக்கச் சொல்கிறீர்களே' என்கிற கேள்வி எழலாம். வெந்நீரில் ஊறவைத்தால் ரத்தக் கறைகள் அப்படியே நாப்கினில் படிந்து நிரந்தரமாகிவிடும். ஊறியதும் நன்கு அலசி வெயிலில் உலர்த்தியே பயன்படுத்த வேண்டும். சூரிய ஒளியானது இயற்கையான கிருமிநாசினியாகச் செயல்பட்டு, பாக்டீரியாவையும் துர்நாற்றத்தையும் நீக்கிவிடும்.
டாம்பூன்களை ஆறு மணி நேரத்துக்கு மேல் அந்தரங்க உறுப்பினுள் வைத்திருக்கக் கூடாது. நீண்ட நேரம் உபயோகிப்பதன் விளைவாக `டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' என்கிற அரிய வகை பிரச்சினை ஏற்படலாம். இது ஒருவகையான பாக்டீரியா தொற்று. காய்ச்சல், சரும அலர்ஜி, குறை ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது.
மாதவிலக்கின் போது பயன்படுத்தும் நாப்கின்கள், டாம்பூன்களை உபயோகிப்பதில் இருக்க வேண்டிய அதிகபட்ச கவனமானது அவற்றை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் அவற்றை டாய்லெட்டினுள் போட்டு ஃப்ளஷ் செய்யக் கூடாது. உபயோகித்ததும் அவற்றை வேஸ்ட் பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும்.
அந்த குப்பைத் தொட்டியை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் கிடக்கும் உபயோகித்த நாப்கின்கள் கிருமித் தொற்றை ஏற்படுத்தும். அது வேறுவிதமான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். ஈக்களும் கொசுக்களும் அவற்றை மொய்த்தால் தேவையற்ற நோய்கள் பரவும்.
நாப்கின் உபயோகிப்பதால் சிலருக்கு அலர்ஜி வரலாம். கடுமையான அரிப்பு, அதன் காரணமாக சருமம் சிவந்து புண்ணாவது போன்றவை ஏற்படலாம். அலர்ஜிக்கான காரணத்தை சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையின் மூலம் குணப்படுத்திக் கொள்ள வேண்டும்