பெண்கள் உலகம்

கர்ப்பகாலத்தில் பெண்கள் யோகா பயிற்சி செய்தால் இவ்வளவு நன்மைகளா?

Published On 2023-06-04 04:53 GMT   |   Update On 2023-06-04 04:53 GMT
  • கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது.
  • ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

பிள்ளைப்பேறு, பெண்களுக்கு மறுபிறவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்ப காலத்தில் பலருக்கு பயம், குழப்பம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கையாள்வதற்கு யோகா எந்த வகையில் உதவும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயபிரபா.

கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் இருந்து யோகா பயிற்சி தொடங்கலாம்?

கருவுற்று இருக்கும் பெண்கள் மூன்று மாதம் முடிந்து, 4-வது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பயிற்சிக்குத் தயாராக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காலை, மாலை இரண்டு வேளையும் உடலை வருத்தாமல் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை, பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

கர்ப்பிணிகள் என்னென்ன யோகாசனங்களை செய்யலாம்?

தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது. இவற்றை பயிற்சியாளரின் துணையுடன் செய்வதே பாதுகாப்பானது.

எத்தனை மாதங்கள் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும்?

பிரசவம் வரை இந்தப் பயிற்சிகளை செய்யலாம். 8-வது மாதத்தில் பயிற்சி செய்யும்போது லேசாக மூச்சு வாங்கும். மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பத்தில் இருந்து செய்யும்போது இந்த சிரமம் ஏற்படாது. குழந்தையின் எடை கூடும்போது உட்கார்ந்து எழும் பயிற்சிகள் செய்வது சற்று சிரமமாக இருக்கும். மற்ற பயிற்சிகளை சற்று இடைவெளி விட்டு ஓய்வெடுத்து செய்யலாம்.

கர்ப்பகால யோகா பயிற்சிகள் செய்வதன் நன்மைகள் என்ன?

கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது. கர்ப்பிணிகள் தன்னைப்போல, பல கர்ப்பிணிகளுடன் ஒன்றாக சேர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்யும்போது தனிமை பயம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் குறையும். வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்குவதற்கும், எளிதாக பிரசவிப்பதற்கும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்களை உறுதியாக்குவதற்கும், உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவும்.

Tags:    

Similar News