- ஒரு வேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம்.
- வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டுவதால் தலைவலி ஏற்படுகிறது.
தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு பொதுவான விஷயம் இந்த தலைவலி. அதிலும் ஆண்களை விடவும் பெண்களுக்கு தலைவலி வருவது அதிகம்.
இன்றைய காலத்தில் பல காணரங்களால் அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றது. தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இதனை அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது.
முதலில் தலைவலி ஏன் வருகிறது என்பது குறித்து சில அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் தற்போது தலைவலி எதனால் ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்வோம். இந்த பிரச்சினை ஏற்படாமல் உங்களால் முன்கூட்டியே தடுக்க முடியும்.
காரணங்கள்:
கோடை காலத்தில் ஏற்படும் தலைவலி வெப்பத்தின் காரணமாக ஏற்படலாம். இந்த வெப்பம் காரணமாக மூளைக்கு செல்கின்ற ஆக்சிஜன் குறைகிறது. இதனால் தலைவலி ஏற்படுகிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் தலைவலிக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.
வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக பயன்படுவதால் கூட தலைவலி ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது. இந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது, காஃபின் அல்லது ஆன்ட்டி ஹிஸ்டமைன் கலந்துள்ள இந்த மருந்துகள் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை சாப்பாடை தவிர்ப்பதால் கூட தலைவலி ஏற்படலாம். நமது மூளை இரண்டு விஷயங்களை முக்கியமாக கொண்டு இயங்குகிறது. அவை குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் இருந்து இவை இரண்டும் நமது மூளைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் மூளைக்கு கிடைக்காத பொழுது, வலி உணர்திறன் கொண்ட நியூரான்களை மூளை தூண்டி நமக்கு தலைவலி ஏற்படுகிறது.
புளித்த அல்லது பழைய உணவுகள் கூட தலைவலியை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீண்ட நாள் அடைத்து வைக்கப்பட்ட வைக்கப்பட்ட வினிகர், சோயா சாஸ், மற்றும் சீஸ் உணவுகள் ஆகியவற்றில் அமினோ அமிலம் உள்ளது. இது நமது உடலில் ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை தூண்டுகிறது.
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு மெக்னீசியம் சத்து இல்லை என்றால் உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். நாம் பகல் நேரங்களில் உடலுக்கு தேவையான தண்ணீரை அருந்தாமல் இருப்பது, இந்த தலைவலி ஏற்பட காரணமாகிறது. உடலில் நீர்சத்து இல்லாமல் இருந்தால் ரத்தம் கெட்டியாகி, இதன் விளைவாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளையில் தூண்டப்படும் ரசாயன செரடோனின் காரணமாக ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது.
உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காததன் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. தினசரி வேலையின் காரணமாக ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி நீர்ச்சத்து குறையும்.
மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு மத்தியில் இந்த தலைவலி பொதுவாக ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.
தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்து கணினியில் நேரத்தை செலவிடுவதால், உங்களுக்கு தலைவலி ஏற்படலாம். இதனால் உங்கள் தோள்கள் இறுக்கமாகிறது மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல் இருக்கிறது.
சில வாசனை காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. வாசனைகள் மூக்கின் வழியாக நேரடியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதிக வேதிப்பொருட்கள் அடங்கிய ஒரு நறுமணம் தலைவலிக்கு வழிவகுக்கிறது.
தூக்கத்தில் உங்கள் பற்களை கடிப்பதாலும் தலைவலி ஏற்படலாம். இந்த பிரச்சினை மன அழுத்தம், மருந்து அல்லது மோசமான பல் சீரமைப்பு ஆகியவற்றால் கூட அதிகரிக்கலாம்.