பெண்கள் உலகம்

அதிக மகசூல் தரும் பந்தல் சுரைக்காய் சாகுபடி

Published On 2023-09-21 06:16 GMT   |   Update On 2023-09-21 06:16 GMT
  • சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும்.

உடலுக்கு குளிர்ச்சியானது என்ற வகையில் சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) ஆக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது. தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூக்கும் சமயத்தில் கொடியின் வேர்பகுதியில் ஊற்றினால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிது.

சுரைக்காய் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம். கிராமங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூரை மீது சுரைக்காய் கொடியை படர விடுவதும் உண்டு. ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்து மற்ற முறைகளில் பயிர் செய்யும் போது மழை, ஈரப்பதம் போன்றவற்றால் சுரைக்காயின் மகசூல் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும். வீரிய ஒட்டு ரகங்கள் நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக செயல்படும். பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

Tags:    

Similar News