கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய பழங்கள்
- கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால் குமட்டல் பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.
- சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும், அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களில் இருந்து தாயையும், சேயையும் பாதுகாப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் கிடைப்பதற்கு பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுள் சிறந்த 5 பழங்கள் குறித்து பார்ப்போம்.
1. வாழைப்பழம்: இதில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துகளும் உள்ளடங்கி இருக்கும். கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் அதிக நார்ச்சத்து கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவது உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் இந்த பிரச்சினைகள் தலைதூக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் அதனை சாப்பிடுவது நல்லது.
2. சிட்ரஸ் பழங்கள்: இவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்ப பெற்றிருக்கும். கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் சி நல்லது. சிட்ரஸ் பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணின் செரிமானத்தை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் உடல் உபாதைகளை போக்கவும் உதவும்.
3. அவகேடோ: இந்த பழத்தில் அதிக போலேட் உள்ளது. வைட்டமின் சி, பி, கே, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் அதிகம் காணப்படும். மேலும் அவகேடோ பழத்தில் உள்ள பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் காலில் ஏற்படும் தசை பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். பொதுவாக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு காரணமாக காலில் பிடிப்புகள் ஏற்படலாம். கர்ப்பிணிகள் அவகேடோ பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவை பூர்த்தி செய்து விடலாம். குமட்டல் பிரச்சினையையும் கட்டுப்படுத்தி விடலாம்.
4. ஆப்பிள்: நார்ச்சத்துள்ள இந்த பழம் அதிக அளவு வைட்டமின் சியையும் கொண்டுள்ளது. வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் பெக்டின் ஆகியவையும் உள்ளன. பெக்டின் என்பது ஆப்பிளில் காணப்படும் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஆப்பிளில் இருக்கும் அதிக சத்துக்களை பெறுவதற்கு அதனை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது. இருப்பினும் தோல் பகுதியை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே சாப்பிட வேண்டும்.
5. தர்பூசணி: தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, பி6, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் தாதுக்களும், நார்ச்சத்துகளும் உள்ளன. கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கை, கால்களில் உண்டாகும் வீக்கம் போன்றவற்றை தணிக்கும் தன்மை தர்பூசணிக்கு உண்டு. தசைப்பிடிப்புகளையும் போக்க உதவும்.
பிளாக்பெர்ரி, கிவி, மாம்பழம், கொய்யா, பேரிக்காய், மாதுளை, திராட்சை, செர்ரி, சப்போட்டா, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடுவது நல்லது.