எதற்கெடுத்தாலும் ஈகோ பார்க்கும் கணவரை சமாளிப்பது எப்படி?
- பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
- உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும்.
பல குடும்பங்களில் ஈகோவை முன்வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ்வின் வேர்களில் தம்பதியரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. புனிதமாகப் போற்றி வளர்த்த காதலை, பல தம்பதியர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.
எந்த உறவானாலும் அதன் உறுதியை உரசிப் பார்க்க அவ்வப்போது வந்து செல்லும் ஈகோ போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது. ஆனால், கொஞ்சம் கவனமாகக் கையாண்டால் ஈகோவை எதிர்கொண்டு மீளலாம். ஆனால், கணவன் – மனைவி இருவரில் ஒருவர் பக்குவக் குறைவானவராக இருந்தால் போதும், இந்த ஈகோ மன முறிவுக்கு வித்திட்டுவிடும். விவாகரத்து கோரி நீதிமன்ற நிழலில் காத்திருக்கும் இளம் தம்பதியினர் பலரிடம் பேச்சுக் கொடுத்தால், பெரும்பாலான மணமுறிவுக்குக் காரணமாக ஈகோவே உள்ளது.
மணவாழ்வில் ஒருவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஈகோவை வளர்க்கும்போது கணவன் – மனைவி உறவு சிக்கலாகிறது. ஈகோ தலைக்கேறியவர்களை எப்போதும் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஏதாவதொரு தவறைச் சுட்டிக்காட்டினால் வேறு முகம் காட்டுவார்கள். பொதுவாக, ஈகோ தலைக்கேறியவர்களிடம் இருந்து விலகவே விரும்புவோம். ஆனால், ஈகோ முற்றியவர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் வாழ்க்கை கசப்புத் தட்டும்.
கடந்த தலைமுறையில் மனைவியைவிடக் கணவனின் வயது பொதுவாக அதிகமாக இருக்கும். பொருள் சார்ந்த குடும்ப ஓட்டமும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கும். இவற்றுடன் கலாச்சாரம் சார்ந்தும் பெண் விட்டுக்கொடுத்துப் போகவே பழக்கப்பட்டிருந்ததால் குடும்பங்கள் ஈகோவில் சிக்காமல் தப்பிப் பிழைத்தன. இன்றோ கிட்டத்தட்ட ஒரே வயதில், இணையான படிப்பு, வேலை, ஊதியம் என இருப்பதால் இளம் தம்பதிகளுக்கு மத்தியில் ஈகோ பிரச்சினை இயல்பாகப் பற்றிக்கொள்கிறது. ஆழமான புரிதலும் நிபந்தனையற்ற அன்பும் கொண்ட தம்பதியரிடையே ஈகோ எடுபடுவதில்லை.
கணவனோ மனைவியோ இணை மீதான பிடிமானம் இளகுவதாக உணரும்போது ஒருவகையான பாதுகாப்பின்மை தோன்றும். அப்போது சிலர் தங்களது சுய மதிப்பை ஈகோவாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சில இடங்களில் ஈகோவின் தோற்றுவாய் தற்பெருமையாக இருக்கும். தனது வீடு, வசதி, படிப்பு, அழகு உள்ளிட்டவை குறித்த தம்பட்டம் பெரும்பாலும் அடுத்தவரை மட்டம் தட்டுவதற்கே பயன்படுத்தப்படுகிறது.
பரஸ்பரம் மதித்தல், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன் மனத்தாங்கல்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே காது கொடுத்தால் அங்கே ஈகோவுக்கு இடமிருக்காது. உண்மையான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈகோவைத் தூர விரட்டும். நிறை குறைகளை ஏற்றுக்கொள்வதும் சச்சரவுகள் முளைக்கும்போது துணையின் பலவீனத்தைக் கவனமாகக் கடந்துபோவதும் இதில் சேரும்.