வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது எப்படி?
- உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.
- தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.
குழந்தையின்மையை போக்குவதற்கான மற்றொரு மருத்துவ தொழில்நுட்பங்கள் தான் வாடகைத்தாய். அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறை ஆகும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது.
இதில் மரபியல் தாய், கருசுமக்கும் தாய் என்று 2 முறை உள்ளது. வாடகைத்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவி இருந்தால் அவரே குழந்தையின் மரபியல் தாய் ஆவார். ஒரு பெண்ணின் கருமுட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருவூட்டப்பட்டு, வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறை கருசுமக்கும் தாய் எனப்படுகிறது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் முறைகேடு நடை பெறாமல் இருக்க வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம்- 2021 கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்தது.
அதில் தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும். அவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் உள்ளன.
தன்பாலின ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களுக்கே ஏற்றதாக இருப்பதாக மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health