பெண்கள் உலகம்

பெண்களுக்கு அட்வைஸ்: குடும்பத்தில் 'ஈகோ' மோதல்களை தவிர்ப்பது எப்படி?

Published On 2023-07-28 04:05 GMT   |   Update On 2023-07-28 04:05 GMT
  • மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
  • ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.

கணவன் - மனைவி இருவரிடமும் ஒருமித்த கருத்தும், புரிதலும் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அதில் யாருடைய கருத்து சரியானது என்பதை நிதானமாக சிந்தித்து அதன்படி செயல்படுவதுதான் சிறப்பானது. 'நீ சொல்வதை நான் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம் மனதில் கூட தோன்றுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. அது 'ஈகோ'வுக்கு வழிவகுத்துவிடும்.

ஏனெனில் ஈகோ புகுந்துவிட்டால் துணையின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது. ஏதேனும் ஒரு விஷயத்தை மனைவி சிறப்பாக செய்து முடிக்கும்போது கணவர் மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவர்தான் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்க முடியும். அதை விடுத்து, ஈகோவுக்கு இடம் கொடுத்து, மட்டம் தட்டி பேசுவது மனைவியை மனம் நோக செய்துவிடும்.

மற்ற சமயங்களில் அன்பும், ஆதரவும் காட்டும் கணவர் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் ஈகோ பார்த்தால் அவரது சுபாவத்தை சரி செய்து விடலாம். மற்றவர்கள் முன்னிலையில் துணை தன்னை விட சிறந்தவராக வெளிப்பட்டுவிடுவாரோ என்ற எண்ணம்தான் ஈகோவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எந்தவொரு சூழலிலும் மனைவி தன்னை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற நிலைப்பாட்டில் கணவர் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு சில விஷயங்களில் மனைவி தன்னை விட சிறப்பாக செயல்படுவதை கணவர் பார்க்கும்போது அவருக்குள் தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும்.

தானும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். அதனை மனைவி புரிந்து கொண்டு கணவரின் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். சிறப்பாக செயல்படும்போது பாராட்ட வேண்டும். அதனைதான் கணவர் எதிர்பார்ப்பார். தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மனைவி நடக்காதபோது அவருக்குள் ஈகோ தலைதூக்க தொடங்கும். பொதுவாகவே ஈகோ கொண்ட மனிதர்களுக்கு அவர்களை புகழ்வதும், பாராட்டுவதும் ரொம்ப பிடிக்கும்.

அவரிடம் நல்ல குணாதிசயங்கள் வெளிப்படும்போது அந்த நிமிடமே மனமார பாராட்டுங்கள். அவரை ஊக்கப்படுத்தும் விதமான வார்த்தைகளை பேசுங்கள். அது அவருக்கு பிடித்து போய் விட்டால் அது போன்ற செயல்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுவார். மனைவி தன்னிடம் நல்ல எண்ணத்துடனே பழகுகிறார். அவருக்குள் ஈகோ இல்லை என்பதை உணர்ந்துவிடுவார். அதற்காக எல்லாவற்றிற்கும் பாராட்டக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் பாராட்டை எதிர்பார்ப்பார். அதனால் அதிகமாகவும் பாராட்டிவிடக்கூடாது.

சில சமயங்களில் துணையின் செயல்பாடுகள் பிடிக்காமல் போகும்போது அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் வார்த்தைகளால் காயப்படுத்தக்கூடும். அப்படி மன காயத்திற்கு ஆளாக நேர்ந்தால் வெளிப்படையாக பேசிவிடுவது நல்லது. மனைவியின் உணர்வுகளுக்கு கணவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார். இல்லாவிட்டால் அப்படி பேசுவதையே வழக்கமாக்கிவிடக்கூடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஈகோ கொண்ட கணவர்மார்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கக்கூடாது.

அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்கக்கூடாது. அந்த சமயத்தில் கோபம் கொள்வதில் தவறு இல்லை. அது அவர்கள் செய்த தவறுகளை புரிய வைக்கும் விதமாக வெளிப்பட வேண்டும். அவர்களே தவறுகளை உணரும்போது மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. எந்தவொரு காரியத்தை செய்வதற்கு முன்பும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து செயல்படுவதுதான் நல்லது. துணையிடம் அனுமதி கேட்டுவிட்டு செயல்படுவதில் தவறில்லை. 'இதையெல்லாம் அவரிடம் கேட்க வேண்டுமா?' என்ற எண்ணம்தான் ஈகோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

Tags:    

Similar News