பெண்கள் உலகம்

பெண்களுக்கு கர்ப்பப்பையை நீங்கினால் தாம்பத்ய உறவில் பிரச்னையா?

Published On 2024-06-09 11:01 GMT   |   Update On 2024-06-09 11:01 GMT
  • கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும்.

பெண்களின் உடலமைப்பில் கர்ப்பப்பை என்பது ஒரு சிக்கலான இனப்பெருக்க உறுப்பு. உள்ளங்கை அளவேயுள்ள இந்தக் கர்ப்பப்பை முழு வளர்ச்சி பெற்றபின் 2,3 குழந்தைகளைக் கூடத் தாங்கும் அளவுக்கு விரிந்து கொடுக்கும் தன்மைப் பெற்றது. சில பெண்களுக்கு மாதவியின் போது பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. சிலருக்கு கர்ப்பப்பையில் கட்டிகள், புண்கள், சத்து குறைவு போன்ற பிரச்சனை வருவதும் உண்டு. மெனோபாஸ் நேரத்திலும் அதிகப்படியான ரத்தப்போக்கு இருப்பதுண்டு.

மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை `ஹிஸ்ட்ரோஸ்கோப் எண்டோமெட்ரியல் அப்ளேஷன் (Hysteroscopic Endometrial Ablation) முறையில் சுரண்டி எடுத்துவிடலாம்.

அதன்பிறகு ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். கர்ப்பப்பையை நீக்குவது வயதைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கர்ப்பப்பை அறுவைசிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கை சாத்தியமில்லை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது 3 மாதங்கள்வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்திய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல, அது மனது சம்பந்தப்பட்டது மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.

கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம். தேவைப்பட்டால் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எனப்படும் ஹெச்ஆர்டி சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

Tags:    

Similar News