பெண்கள் உலகம்

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கங்கள்-5

Published On 2024-06-09 03:01 GMT   |   Update On 2024-06-09 03:01 GMT
  • உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடு.
  • ‘ஐகிகாய்’ என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும்.

ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையும், கலாசாரமும், அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உலகளவில்100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடாக அது விளங்குவதுதான் அதற்கு காரணம். மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வதும், அதனை கடைப்பிடிப்பதும் அவசியமானது.

மகிழ்ச்சி :

'ஐகிகாய்' என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகும். எந்தவொரு சூழலிலும் அமைதியை கடைப்பிடிப்பது, எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பது, சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை கண்டறியலாம் என்பதை நோக்கமான கொண்டது. இந்த தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை தக்கவைத்துக்கொள்கிறார்கள்.

சாப்பாடு:

உடலை கோவில் போல வழி நடத்த வேண்டும் என்பது ஜப்பானிய உணவுக்கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். மது, புகையிலை போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விலக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள்.

உணவில் குறைந்த கலோரி கொண்ட பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கிறார்கள். சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலோரிகள் குறைவாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். அதனால் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

கிரீன் டீ :

கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பாலிபீனால்கள் அதிகம் இருக்கிறது. அதனால் ஜப்பானியர்கள் கிரீன் டீயை தங்கள் பாரம்பரிய பானமாக ருசிக்கிறார்கள்.

இது குடல் நலனை பாதுகாக்கும், செல் சிதைவை தடுக்கும், நாள்பட்ட நோய்களில் இருந்து விலக்கி வைக்கும் பானமாக விளங்குகிறது. ஜப்பானிய பாரம்பரிய பானமான கிரீன் டீ உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறது.

சமூக ஈடுபாடுகள்:

குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிக்கடி சமூக செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். அதன் மூலம் சமூக தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். அப்படி இயங்குவது சமூகத்திற்கு பயன்படும்படியாக அமைவதுடன் அவர்களின் உடல் செயல்பாடும் மேம்படுகிறது. அது அவர்களின் ஆரோக் கியத்திற்கும் நன்மை தருவதாகவும் அமைந்துவிடுகிறது.

மெதுவாக சாப்பிடுதல்:

ஜப்பானியர்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். உணவை நன்றாக மென்று சாப்பிடவும் செய்கிறார்கள். அது செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு வித்திடுகிறது. அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுவதற்கு குடும்பத்தினரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உறவு பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

Tags:    

Similar News