பெண்கள் உலகம்

கொரிய மக்களின் வாழ்வியல் முறைகள்!

Published On 2024-07-07 03:32 GMT   |   Update On 2024-07-07 03:32 GMT
  • பார்லியில் தயாராகும் தேநீர் கொரியாவின் பிரபலமான பானமாகும்.
  • ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

கொரியா நாட்டு மக்கள் பின்பற்றும் உணவுப்பழக்கமும், வாழ்வியல் முறையும் உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது. அதற்கேற்ப சரும பராமரிப்பு முதல் சமச்சீர் உணவுகள் வரை ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.

இளமையையும், சுறுசுறுப்பையும் தக்கவைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற 10 கொரிய பழக்கவழக்கங்கள் பற்றி பார்ப்போம்.

1. குடல் ஆரோக்கியம்

கொரிய உணவில் கிம்ச்சி, தயிர் போன்ற புளித்த உணவுகள் பிரதானமாக இடம் பிடிக்கின்றன. இந்த உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. அவை குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளை ஊக்குவித்து வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.

வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர், ஊறுகாய் மற்றும் பாரம்பரிய புளித்த பானங்களை விரும்பி உண்கிறார்கள். இத்தகைய உணவுப் பதார்த்தங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

2. பார்லி தேநீர்

'போரி சா' எனப்படும் பார்லியில் தயாராகும் தேநீர் கொரியாவின் பிரபலமான பானமாகும். இது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், செரிமானம் சுமுகமாக நடைபெறவும் உதவும். இந்தியர்கள் பார்லி டீ பருகுவது டீ, காபி போன்ற காபின் சேர்க்கப்பட்ட பானங்களுக்கு மாற்றாக அமையும். உடலில் நீர்ச்சத்தை பேணவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு புத்துணர்ச்சியூட்டவும் உதவும்.

3. உடல் செயல்பாடு

கொரியர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் மற்றும் ஜிம் உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் காலை நேர நடைப்பயிற்சி, யோகாசனம் மேற்கொள்ளலாம்.

வார இறுதி நாட்களில் குறுகிய தூர பயணம் மேற்கொள்ளலாம். கொரியர்களை போலவே இந்த உடல் செயல்பாடுகளை அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.

4. சரும பராமரிப்பு

கொரியர்கள் சரும பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சருமத்தில் படியும் மாசுக்களை நீக்குவது, இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்வது, ஈரப்பதத்தை தக்க வைப்பது, சூரிய ஒளிக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது என சரும நலனில் அக்கறை கொள்வார்கள். காற்று மாசுபாடு மற்றும் கடுமையான வானிலையால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இந்த வழக்கங்களை பின்பற்றலாம்.

5. சமச்சீர் உணவு

கொரிய உணவுகளில் காய்கறிகள், சத்து குறைந்த புரத உணவுகள் மற்றும் கிம்ச்சி போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. அதுபோல் இந்தியர்கள் தங்கள் உணவில் அதிக காய்கறிகள் மற்றும் புளித்த உணவுகளை சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் துணை புரியும்.

6. பெரியவர்களுக்கு மரியாதை

கொரியர்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் வழங்குகிறார்கள். தியானம் மற்றும் நினைவாற்றல் போன்ற பயிற்சிகள் மூலம் மன நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறார்கள்.

பிறர் செய்த உதவிகளுக்கு நன்றியுணர்வை கடைப்பிடிப்பதிலும், குடும்ப மரபுகளை மதிப்பதிலும் தனித்துவமிக்கவர்களாக விளங்குகிறார்கள். இதனை பின்பற்றுவதன் மூலம் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

7. பாரம்பரிய மூலிகை தேநீர்

கொரியர்கள் ஜின்ஸெங் டீ, கிரீன் டீ உள்பட பல்வேறு மூலிகை தேநீர்களை உட்கொள்கின்றனர். செரிமானம் மற்றும் மன நிலையை மேம்படுத்தும் தன்மைகளுக்காக மூலிகை தேநீரை ருசிக்கலாம்.

8. உணவு சாப்பிடும் முறை

கொரியர்கள் நிதானமாக சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். சாப்பிடும் சமயத்தில் வேறு எதிலும் கவனம் பதிக்கமாட்டார்கள். ஒவ்வொரு முறை உணவை உட்கொள்ளும்போதும் நன்கு மென்று அதன் ருசியை ஆழ்ந்து ரசிக்கிறார்கள்.

இந்தியர்களை பொறுத்தவரை அவசரமாக உண்ணும் வழக்கத்தைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அதிலும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் வேகமாக சாப்பிடுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் சாப்பிடும் வேகத்தை குறைத்தும், அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தும் உணவை ருசிக்கலாம். இந்த பழக்கம் செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் வித்திடும்.

9. குடும்ப நேரம்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடுவது கொரியர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். வெளி இடங்களில் சாப்பிட அதிகம் விரும்ப மாட்டார்கள். வீட்டில் தயாராகும் உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவும் விரும்புவார்கள். அதன் மூலம் குடும்ப ஒற்றுமை உணர்வை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வழக்கத்தை பின்பற்றி குடும்ப பிணைப்புகளை வலுப்படுத்தலாம்.

10. காலை உணவின் முக்கியத்துவம்

கொரியர்கள் ஒருபோதும் காலை உணவைத்தவிர்க்க மாட்டார்கள். பெரும்பாலும் சத்தான, சமச்சீரான காலை உணவை உட்கொள்கிறார்கள். அதில் முழு தானியங்கள், பழங்கள், புரதங்கள் உட்பட ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்கிறார்கள்.

காலை உணவை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் உடல் ஆற்றலையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

Tags:    

Similar News