பெண்கள் உலகம்

பெண்களே 'கிரெடிட் கார்டு' வாங்கும் போது கவனம் தேவை...!

Published On 2023-04-21 07:37 GMT   |   Update On 2023-04-21 07:37 GMT
  • கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம்.
  • கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டுவிடலாம்.

அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும். எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.

கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்ச தொகையைக செலுத்தவும் வாய்ப்பு உண்டு.

மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும்.

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும். நமது மாத வருமானத்தைப் போல குறைந்தபட்சம் 3 மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.

கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.

Tags:    

Similar News