பெண்கள் உலகம்

மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலங்காரச் செடிகள்

Published On 2023-11-05 08:25 GMT   |   Update On 2023-11-05 08:25 GMT
  • உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியை செய்கின்றன.
  • அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது.

வீட்டின் அறைகளை அழகுபடுத்தும் அம்சங்களில் ஒன்றாக உள் அலங்காரச் செடிகளும் இடம் பிடித்திருக்கின்றன. அவை அழகியல் நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டாலும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சில உள் அறை தாவரங்கள் காற்றை சுத்திகரிக்கும் பணியைச் செய்கின்றன. அந்த வகையில் மன நிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சில உள் அலங்காரச் செடிகளுக்கு இருக்கிறது. அமைதிக்கும், மகிழ்ச்சியான மன நிலைக்கும் வித்திடும் அம்சங்களை கொண்ட உள் அலங்காரச் செடிகள் உங்கள் பார்வைக்கு...

பீஸ் லில்லி

இதன் பெயருக்கேற்பவே அமைதியான மனநிலைக்கு இட்டு செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் மலரும் வெள்ளை நிற பூக்கள் மனதை வசீகரிக்கும். உணர்வுகளை சாந்தப்படுத்தும். காற்றின் தரத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

மணி பிளாண்ட்

`டெவில்ஸ் ஐவி' என்று அழைக்கப்படும் இதுஅதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. இதனை எளிதாக பராமரிக்கலாம். குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரக்கூடியது.

 ஸ்பைடர் பிளாண்ட்

காற்று மூலம் வீட்டுக்குள் சூழ்ந்திருக்கும் மாசுக்களை நீக்கும் தன்மை இந்தச் செடிக்கு உண்டு. இதனை சிறந்த காற்று சுத்திகரிப்பானாக கருதுகிறார்கள். இது வீட்டிற்கு அழகும் சேர்ப்பதோடு சுற்றுச்சூழலிலும், மன நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

கோல்டன் பொத்தோஸ்

காற்றை சுத்தப்படுத்தும் தாவரங்களில் சிறந்ததாக கருதப்படும் இது, காற்றில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வாயுவை உறிஞ்சி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. எத்தகைய கால நிலையிலும் செழித்து வளரும் திறனுடையது. இதனை வளர்த்தால் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஸ்நேக் பிளாண்ட்

இந்த செடி காற்று சுத்திகரிப்பு பண்புகளை கொண்டது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் திறன் கொண்டது. அதனால் இது சிறந்த உள் அலங்கார தாவரமாக அறியப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது அமைதி மற்றும் நேர்மறை உணர்வை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

 கற்றாழை

பெரும்பாலான வீடுகளில் வீட்டின் வெளிப்பகுதியில் இவை வளர்க்கப்படுகிறது. இதுவும் உள் அலங்காரச் செடிகளுடன் இணைந்துவிட்டது. காற்றை சுத்தப்படுத்துவதோடு பல்வேறு சரும பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியது. மேலும் கற்றாழையை வீட்டிற்குள் வைத்திருப்பது நேர்மறை ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.

லாவெண்டர்

இது பாரம்பரிய வீட்டு தாவரமாக இல்லாவிட்டாலும் அலங்காரச் செடிகள் வரிசையில் இடம் பிடித்துவிட்டது. மற்ற உள் அலங்காரச் செடிகளை போலவே வீட்டிற்குள் செழித்து வளரும். அதன் பூக்கள் வெளியிடும் அமைதியான வாசனை மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதை தளர்வடையச் செய்து இதமான உணர்வை ஏற்படுத்தும்.

Tags:    

Similar News