கர்ப்ப காலம்... பிரசவத்திற்கு பின் பெண்களின் உணவுமுறை...
- காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகளை உண்ணலாம்.
- முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள், குழந்தையின் நலனையும் சேர்த்து ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டும். இக்காலத்தில் இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நன்மை பயக்கும். முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
மலச்சிக்கல் ஏற்படாதவாறு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகள் போன்றவற்றை உண்ணலாம். எளிதில் உணவுச் செரிமானம் ஏற்பட சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குமட்டல், வாந்தியை நீக்க மாதுளை பழச்சாறு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவற்றுடன் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பாவன பஞ்சாங்குல தைலத்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உளுந்து தைலம், குந்திரிக தைலம் போன்றவற்றை இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தடவி வரலாம். இவை சுகமகப்பேற்றிற்கு உதவி செய்யும்.
மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் இயல்பான பலமாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும்.மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து, வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பாதாம் பருப்பு இவை பால்சுரப்பிற்கு சிறந்த உணவாகும்.
இவற்றுடன் சித்த மருந்துகளான சவுபாக்ய சுண்டி லேகியம் சதாவேரி லேகியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை பிரசவத்திற்கு பின்னரான உதிரப்போக்கினை சீராக்குவதுடன், பால் சுரப்பினையும் தூண்டுவிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல், பித்தப்பைக் கல் போன்றவை மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களில் காணப்படுகிறது.
எனவே மைதா மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் அளவுடன் உணவு அருந்துதல், உணவில் பூண்டு, மஞ்சள், பீட்ரூட், கேரட், பப்பாளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் இவற்றுடன் சித்த மருந்துகளான ஏலாதி, நெருங்சில், கீழாநெல்லி, கிச்சிவி மணப்பாகு போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளுவதால் பித்தப்பை கல்லினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெளிவரலாம்.