பெண்கள் உலகம்

சானிடரி பேடுகளால் ஏற்படும் பிரச்சனைகளும்... துணி நாப்கினின் நன்மைகளும்...

Published On 2023-04-12 05:32 GMT   |   Update On 2023-04-12 05:32 GMT
  • சானிடரி பேட்களின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
  • பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேடு பயன்படுத்துகின்றனர்.

பெண்கள் பூப்பூ எய்திய நாளில் இருந்து கடைப்பூப்பூ என்று சொல்லப்படும் மெனோபாஸ் நிலையை அடையும் வரை ஒவ்வொரு மாதமும் பூப்பூ சுழற்சி நடைபெறுகிறது. வெகுசிலரே ஒவ்வொரு மாதமும் இதனை எளிமையாக கடந்து செல்கின்றனர். பல பெண்கள் அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி, குமட்டல், அதிகப்படியான உதிரப்போக்கு, சோர்வு போன்ற உடல்நல பாதிப்புகளோடு கோபம், எரிச்சல், தூக்கமின்மை போன்ற மனநல மாற்றங்களையும் அடைகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் தற்பொழுது மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளையே பயன்படுத்துகின்றனர். இன்றைய சானிடரி பேடுகளில் அவற்றின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, சூப்பர் அப்சார்பென்ட் பாலிமரை பயன்படுத்துகின்றனர். மேலும் கசிவைத் தடுக்க பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றுடன் டையாக்ஸின்கள், பெட்ரோ கெமிக்கல்கள் போன்ற ரசாயணப் பொருட்கள் சேர்க்கப்படுவதாக தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இத்தகைய வேதிப்பொருள்கள் குறைந்த அளவில் பயன்படுத்தினாலும் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளவை. டெல்லியில் ஒரு என்.ஜி.ஓ. நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஆர்கானிக் பேட்கள் என்று தற்பொழுது வழக்கத்தில் உள்ள பேடுகளிலும் இத்தகைய மூலப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப்போலவே இலியோனிஸ், யுனிவர்சிட்டி மேற்கொண்ட ஆய்வில் மெதிலீன் குளோரைட், டொலுயீன், சைலீன் போன்ற செயற்கை வேதிப்பொருள்கள் காணப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் வுறுகின்றன.

இத்தகைய சானிடரி பேடுகளின் பயன்பாட்டினால் சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறைந்தது 4 மணி நேரமும், அதிகபட்சம் 6 மணி நேரமும் தான் ஒரு சானிடரி பேட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே பேட் பயன்படுத்துகின்றனர். மேலும் ரத்தக்கசிவு இல்லையெனில் பயன்படுத்திய அதே நாப்கினை மீண்டும் சிலர் பயன்படுத்துகின்றனர். இவை இரண்டுமே மிகவும் தவறான பழக்கவழக்கங்கள் ஆகும். இதனால் பல்வேறு வகையான கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் நாப்கினில் உள்ள ரசாயணங்கள் பிறப்புறுப்பின் தோலின் வழியாக உடலுக்குள் சென்று முறைதிருந்திய மாதவிடாய், ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய், பெண் உடலில் ஆண் ஹார்மோன்களின் அதிக உற்பத்தி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

இவை அனைத்தையும் டயாக்சின் என்ற ஒேர ஒரு ரசாயனமே ஏற்படுத்திவிடும். இத்தகைய டயாக்சின் நாம் பயன்படுத்தும் சானிடரி பேட்களில் காணப்படுகிறது. 2002-ல் அமெரிக்காவில் டாக்டர்.எட்வர்ட், டயாக்சின் குறித்த தன்னுடைய மருத்துவ கட்டுரையை வெளியிட்டார். அதில் பல்வேறு ஆபத்துகளைப் பற்றி விளக்கியிருந்த அவர், குறிப்பாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், மார்பக புற்று, கருப்பை புற்று, குறுகிய மாதவிடாய், சினைப்பை நீர்கட்டி, கருவுறுதலில் தாமதம் போன்றவை டயாக்சின் பாதிப்பினால் ஏற்படும் என்று விளக்கி உள்ளார். நாப்கின்கள் பழக்கத்திற்கு வராத காலகட்டத்தில் நம் வீடுகளில் பெண்கள் பருத்தியினாலான துணிகளைப் பயன்படுத்தினர்.

சிலர் அதனை துவைத்து மீண்டும் பயன்படுத்தினர். சிலர் பயன்படுத்தியவைகளை புதைக்கவோ, எரிக்கவோ செய்து ஒவ்வொரு முறையும் புதியவற்றை பயன்படுத்தினர். இது ஒவ்வொரு நபரின் பொருளாதார நிலையை சார்ந்து இருந்தது. ஆனால் அக்காலப் பெண்களிடம் மாதவிடாய் கோளாறுகளும், சினைப்பை நீர்கட்டி, மகப்பேற்றில் காலதாமதம், கருப்பை மற்றும் மார்பகம் புற்று வெற்றின் தாக்கம் தற்போது இருக்கும் பெண்களிடம் காணப்படும் அளவிற்கு பரவி இருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. ஏனெனில் அவர்கள் இத்தகைய நோய்களின் பாதிப்புகளில் பெரும்பாலும் தாக்கப்படவில்லை என்பதற்கு அவர்களது சந்ததிகளான நம்முடைய பெற்றோரும், நாமும் அறிந்ததே.

ஆனால் இன்று ஏன் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் இத்தகைய பாதிப்புகளை அடைகின்றனர் என ஆராய்வோமானால், நமது உணவு மற்றும் வாழ்வியல் மாற்றம் ஒரு காரணமாக இருப்பினும், இன்று நாம் பயன்படுத்தும் நாப்கின்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது. நாம் ஏற்படுத்தும் மாற்றம் மட்டுமே நம்முடைய எதிர்கால சந்ததியைப் பாதுகாக்கும். எனவே இயற்கையாக தயாரிக்கப்பட்ட துணி நாப்கின்களை வாங்குவது அல்லது வீட்லேயே நம் தேவைக்கு ஏற்ப தயாரிப்பது என்ற ஏதேனும் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்.

துணி நாப்கின்களை பயன்படுத்திய பிறகு நன்றாக தண்ணீரில் ஊறவைத்து, கிருமி நாசினியைக் கொண்டு துவைத்து, வெயிலில் உலரவைத்து பயன்படுத்தினால் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. தற்பொழுது பலர் மூலிகை நாப்கின்களை வீடுகளிலேயே தயாரிக்கின்றனர். அதில் பருத்தியுடன் திரிபலா சூரணம், கற்றாழை, வேப்பிலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். தேவையான அளவிற்கு காட்டன் துணியை கத்தரித்து அதன்மேல் பஞ்சினை வைத்து, பின்னர் சிறிது மூலிகைப் பொடிகளை தூவி, மீண்டும் பஞ்சினை வைத்து காட்டன் துணியினால் மூடி தையல் மிஷினின் உதவியுடன் நான்கு பக்கங்களிலும் தைத்து நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாம் நம் உடல்நலத்திற்கென சிறிது நேரம் ஒதுக்கி எளிமையான முறையில் வீட்லேயே தயார் செய்தோ அல்லது வெளியில் விற்கப்படும் துணி நாப்கின்களையோ பயன்படுத்தலாம். எத்தகைய நாப்கினாக இருப்பினும் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி பயன்படுத்துவதே சிறந்தது. இவ்வாறு பயன்படுத்தும்போது அவை சரும பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. எந்தவித ரசாயணமும் அற்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவற்றால் கருப்பை புற்று நோய், மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன்களின் சீரற்ற தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சானிடரி பேட்களின் பயன்பாட்டினைப் பற்றிய விழிப்புணர்வை பள்ளிக் குழந்ந்தைகளிடம் இருந்தே தொடங்குவது சிறந்தது. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களைக் குறித்து ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் இத்தகைய இயற்கையான சானிடரி பேட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

ஏனெனில் ரசாயணப் பொருள் மற்றும் ப்ளாஸ்டிக் நிறைந்த நாப்கினை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றதோ, அதைப்போலவே பயன்படுத்திய நாப்கின்கள் புதைக்கப்பட்டால் அவை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம், நேரத்தில் அவை எரிக்கப்பட்டால் வளிமண்டலக் காற்றுடன் கலந்து சுவாசப்பாதை நோய்களை ஏற்படுத்தும். எனவே எளிதில் மக்கக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாமும் நல்ல உடல்நலனோடு வாழ்ந்து், எதிர்கால சந்ததியரையும் வளமோடு வாழச் செய்வோம்.

Tags:    

Similar News