பெண்கள் உலகம்

பெண்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம்...!

Published On 2024-01-13 09:02 GMT   |   Update On 2024-01-13 09:02 GMT
  • பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா?
  • ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்கள்.

வருடத்துக்கு ஒருமுறை ஆயுத பூஜை என்கிற பெயரில் மெஷின்களுக்குக் கூட பூரண ஓய்வு அளிக்கிறோம். இன்னும் வீட்டில் உள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே அன்றொரு நாள் உழைப்பில் இருந்து ஓய்வு கொடுத்து மரியாதை செய்கிறோம். ஆனால், ரத்தமும் சதையுமாக உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்கிற உயிருக்கு, குறிப்பாக பெண்கள் போதுமான ஓய்வு கொடுக்கிறார்களா? பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களை பற்றி பார்ப்போம்.

 மாதவிலக்கு:

இந்த நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதால்தான் அந்தக் காலத்தில் 3 நாட்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள். அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும். அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும். இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது என்பது மிக முக்கியம்.

மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் தீர்வு.

 பிரசவத்துக்குப் பிறகு:

வளைகாப்பு, சீமந்தம் என்று அம்மா வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பிரசவத்துக்குப் பிறகு குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கு அம்மா வீட்டிலேயே ஓய்வெடுக்கச் செய்வதும் இந்தக் காரணத்துக்காகத்தான். ஆனால், இன்றெல்லாம் அதைப் பத்தாம்பசலித்தனம் என்று சொல்லிக் கொண்டு குழந்தை பெறுகிற நாள் முதல் வேலைக்குப் போய்க்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கும் ஆரம்ப நாட்களிலேயே வேலைக்குத் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.

கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சிறுநீரக இயக்கம், சுவாசத்தின் தன்மை என பெண்ணின் ஒட்டு மொத்த உடலியக்கமும் மாறிப்போகும். பிரசவத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பும். அதற்கு குறைந்தது 6 வார கால ஓய்வு அவசியம்.

அப்படி கட்டாய ஓய்வெடுக்கிற போதுதான், அந்த பெண்ணால், குழந்தைக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும். கைக்குழந்தை வைத்திருக்கும் பல பெண்களுக்கு தூக்கம் ஒரு பெரிய பிரச்சினை யாகத்தான் இருக்கும். இதை சமாளிக்க ஒரே வழி, குழந்தை தூங்கும்போது தாயும் தூங்கி ஓய்வெடுப்பது ஒன்றுதான்.

பிரசவத்துக்குப் பிறகு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், பெண்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே மனநோய் வரும் வாய்ப்புள்ள பெண்கள் என்றால் அவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகு 'போஸ்ட் பார்ட்டம் ப்ளுஸ்' என்கிற மனநல சிக்கல் தாக்கலாம்.

தான் பெற்ற குழந்தையையே தூக்குவதைத் தவிர்ப்பது, அந்தக் குழந்தையே தன்னுடையதில்லை என்பது, தாய்ப்பால் தர மறுப்பது, சுய சுத்தம் பேண மறுப்பது, தற்கொலை முயற்சி என இது பல பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பு குறித்த பயம் அதிகரிக்கும். எல்லோரிடமும் வன்முறையாக நடந்துகொள்வார்கள்.

சிலருக்குப் பிரச்சினை முற்றி, குழந்தையையே கொலை செய்யும் அளவுக்கும் தீவிரமாகும். இவர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லாத காரணத்தால் தாய்ப்பால் சுரப்பு குறையும். எரிச்சல் அதிகரிக்கும். எனவே, பிரசவித்த பெண்ணிடம் மேற்கண்ட அறிகுறிகளை உணர்ந்தால் அவருக்கு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கு உதவுவதே முதல் சிகிச்சை.

மெனோபாஸ்:

மாதவிலக்கு முற்றுப்பெறும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற பெண்களுக்கு அடிக்கடி மனநிலையில் மாற்றம், தலைவலி, படபடப்பு, கோபம், மன உளைச்சல், தற்கொலை எண்ணம், அழுகை எனப் பலவிதமான உணர்ச்சிகள் வந்து போகும். மூளையில் உண்டாகிற ஹோர்மோன் மாற்றங்களின் விளைவாகத் தூக்கம் இருக்காது.

எந்த விடயத்திலும் பிடிப்பே இருக்காது. உடல் மற்றும் மனதளவில் உணரும் அறிகுறிகளின் காரணமாக தூக்கம் இருக்காது. அப்படியே தூங்கினாலும் பாதியில் விழித்து எழுவார்கள். பயமும் பதற்றமும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இருக்கும் பெண்கள் மருத்துவரை அணுகி, பதற்றத்தைக் குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும்.

 வயதானவர்கள்:

முதுமையின் காரணமாக உடலை வாட்டும் நோய்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும். இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும். ஓய்வும் தூக்கமும் இல்லாத பெண்களுக்கு பருமன் பிரச்சினையும் சேர்ந்துகொள்ளும். மறதி, குழப்பம், கோபம், தனிமைத் துயரம் என எல்லாம் அதிகரிக்கும். உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுத்து ஆரோக்கியமான உணவு மற்றும் சூழலை உருவாக்கிக் கொள்வதுதான் இவர்களுக்கான அவசியத் தேவை.

Tags:    

Similar News