இந்தியாவில் பெருகிவரும் குழந்தையின்மை
- இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது.
- குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பிரசவம்... ஒரு தாயின் மறுபிறப்பாக கருதப்படுகிறது. ஆனாலும் மருத்துவ வளர்ச்சி பெறாத காலத்தில் பிள்ளை பிறப்பு என்பது இறைவன் அளிக்கும் பரிசாக கருதப்பட்டது. இதனால் அப்போது ஒரு வீட்டில் 10 பிள்ளைகள், 12 பிள்ளைகள் என்பது சாதாரணமாக இருந்தது.
இதன் விளைவாக 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை 133.92 கோடியாக பெருகியது. அது நாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே இந்திய அரசு 1964-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்தது. அது குறித்த விழிப்புணர்வும் பரவியது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள்.
ஆனாலும் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை இந்தியா 2027-ம் ஆண்டு முந்தி விடும் என்று ஐ.நா. கணித்து உள்ளது. அதற்கு ஏற்றாற் போல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13-வதாக ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தது.
இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த தம்பதிக்கு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு அந்த ஆணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் மக்கள் தொகையில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியா குழந்தையின்மையில் முதலிடத்தில் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் 27.5 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மெட் டெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 2019-ல் கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2 -ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
அது போல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 1.8 ஆக குறைந்து உள்ளது. இதற்கு அந்த மாநிலங்களில் கல்வி அறிவில் முன்னேறி இருப்பது காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 2.3 ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் தென்மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதமாகவும், வட மாநிலங்களின் பங்கு 43.2 சதவீதமாகவும் உள்ளது.
திருமணமான தம்பதிகளில் 46 சதவீதம் பேருக்கு குழந்தையின் மை பிரச்சினை இருப்பதாகவும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட 63 சதவீத தம்பதிகளுக்கும், 21 - 30 வயதுக்குட்பட்ட 34 சதவீத தம்பதிகளுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களால் ஒவ்வொருவரும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உணவு முறை, வேலைப்பளு, திருமண வயது அதிகரிப்பு, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.
மற்ற நாடுகளில் திருமண வயது 23 முதல் 25 வரை உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 என மிக குறைவாக உள்ளது . இதனால் பெண்களின் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது.
பொதுவாக பெண்கள் 21 வயது முதல் 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது. எனவே வயது அதிகரிக்கும் போது இயல்பாக கருத்தரிப்பது கூட சவால் நிறைந்ததாக மாறி விடுவதாக மகப்பேறு மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.
ஆனால் கடந்த 15 வருடங்களாக வேலை உள்ளிட்ட காரணங்களால் திருமண வயது தாண்டிய பிறகே திருமணம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. வயது அதிகமாகும் போது கருப்பை தனது சீரான செயல்பாட்டை செய்யாமல் இருப்பதாலும், குழந்தைப் பேறை தம்பதிகள் திட்டமிட்டு தள்ளிப்போடுவதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கி விடுகிறது.
குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆண்களின் மலட்டுத்தன்மையும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, நீண்ட கால புகைப்பழக்கம், மது, உயிரணுக்கள் குறைவு, பரம்பரை ரீதியான குறைபாடு உள்ளிட்டவை குழந்தைப்பேறை உண்டாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
இதற்கு தீர்வு கண்டு குழந்தை பேறுக்காக கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல், விந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல், சோதனைக்குழாய் உள்ளிட்ட முறைகளை பலரும் நாடுகின்றனர். இதனால் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஒழுங்குபடுத்த மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றி உள்ளது.
குழந்தை பிறப்பு என்பது தம்பதிகள் இடையே எழும் இயல்பான உணர்வால், உறவால் நிகழும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று குழந்தை பிறப்பு சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருவது வினோதமான முரணாகவே பார்க்கப்படுகிறது.