`அழுக்குத் தண்ணீர்' சொல்லும் அழகான தத்துவம்
- பிரியமான மகளுக்கு பாசமான தந்தை ஒரு பரிசு அளிக்கிறார்.
- ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்பு பரிசாக வழங்கி இருக்கிறார்.
பிரியமான மகளுக்கு பாசமான தந்தை எதை பிறந்தநாள் பரிசாக வழங்குவார்... நல்ல உடை அல்லது டெடி பியர், அல்லது விலை உயர்ந்த வாட்ச், ஐபோன்... இப்படி எதுவாகவும் இருக்கலாம்... ஆனால் ஒரு தந்தை அழுக்கு தண்ணீர் அடைத்த பாட்டிலை மகளுக்கு அன்புப் பரிசாக வழங்கியிருக்கிறார். அது நல்ல வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குகிறது என்றால் நம்புவீர்களா?
பட்ரீசியா மவ் என்ற பெண், 'நல்ல தந்தையின் பரிசு' என்று அவர் அழுக்கு தண்ணீர் வழங்கியதை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "தந்தை தனக்கு இப்படி ஒரு பரிசை வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த காலத்தில், அவர் முதலுதவி பெட்டி, பெப்பர் ஸ்பிரே, என்சைக்ளோபீடியா, ஒரு சாவிக்கொத்து, மற்றும் அவர் எழுதிய புத்தகம்... இப்படி பல பரிசுகளை வழங்கியுள்ளார். " என்று எழுதியுள்ளார்.
இதை ஏன் கொடுக்கிறேன் என்று தந்தை விளக்கியதையும் அவர் கூறியுள்ளார். "குலுக்கும்போது, அழுக்கு பாட்டிலில் எல்லா இடமும் அசுத்தமாகி காட்சி தரும். அதுபோலவே நாம் வாழ்வில் உணர்ச்சிவசப்பட்டு படபடக்கும் போது எல்லாம் இருளாக (அழுக்காக ) தோன்றும். ஆனால் அமைதியை கடைப்பிடித்தால் அழுக்கு படிந்துவிடுவதுபோல துன்பங்கள் குறைந்து எங்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் பிரதிபலிக்கும்" என்று தந்தை கூறியதாக அவர் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.
அடேங்கப்பா அழுக்கு பாட்டிலில் ஜென் தத்துவம்...