இல்லத்தரசிகளே கேஸ் சிலிண்டர் வேகமா காலியாகுதா? சிக்கனமா பயன்படுத்துவது எப்படினு பார்க்கலாம்...
- சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
- சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.
ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.
சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.
பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.
வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்
இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.
சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.
சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.
கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.
காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.
இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.