பெண்கள் உலகம்
null

கர்ப்பமான பெண்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடக்கூடாது

Published On 2023-10-27 06:38 GMT   |   Update On 2023-10-28 10:46 GMT
  • சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப்பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் குறிப்பிட்ட காய்கறிகளையும் உண்பதை தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை தினமும் அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லது.

தவிர்க்க வேண்டியவை:

* மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.

* பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன்மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம்.

* பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.

* பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம் கூட ஏற்படலாம்.

* பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

* காரமான உணவுகள் என்பது சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது.

* துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News