பெண்கள் உலகம்

கர்ப்பிணிகளை ஒருக்களித்து படுக்கச்சொல்வது ஏன்?

Published On 2024-02-21 08:22 GMT   |   Update On 2024-02-21 08:22 GMT
  • டிரைமெஸ்டரில் எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
  • இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) இருக்கும்போது எந்த பொசிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம். அதாவது, உங்களுக்குப் பிடித்த, வசதியான எந்த நிலையிலும் தூங்கலாம். ஒருக்களித்தும் படுக்கலாம், மல்லாந்தும் படுக்கலாம், குப்புறகூட படுத்தும் தூங்கலாம், பிரச்னை இல்லை.

 முதல் மூன்று மாதங்களில் எந்த பொசிஷனில் படுத்து உறங்கினாலும் பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு அது எந்த சிரமத்தையும் தருவதில்லை. அதுவே, இரண்டாவது, மூன்றாவது டிரைமெஸ்டரில், ஒருக்களித்துப் படுத்து உறங்குவதுதான் சரியானது. அதிலும் குறிப்பாக, இடப்பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்குவதே சரியானது. அது சவுகரியமாகவும் இருக்கும், அந்த பொசிஷன் பாதுகாப்பானதும்கூட.

இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதன் மூலம், நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கர்ப்ப கால சிக்கல்களையும் தவிர்க்க உதவும். படுத்திருக்கும்போது இரண்டு கால்களுக்கு இடையில் தலையணை வைத்துக்கொள்வது, முதுகுப் பகுதிக்கு தலையணை வைத்துக்கொள்வது போன்றவையும் கர்ப்பிணிகளுக்கு சவுகரியமான உணர்வைத் தரும். நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

 முதுகுப்பகுதி சமமாக இருக்கும்படி மல்லாந்து படுக்கும்போது, அதிலும், பிரசவ காலம் நெருங்கும் நேரத்தில் அப்படிப்படுப்பது, ஒருவித அசவுகரியத்தைத் தரும். ரத்தக் குழாய்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையலாம். அதனால் உங்களுக்கு மயக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். ரத்த அழுத்த அளவும் குறையலாம்.

இந்த பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்கவே, ஒருக்களித்துப் படுக்கவும், தலையணை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருக்களித்துப் படுத்த நிலையிலும் உங்களுக்கு மூச்சு விட சிரமம் இருந்தாலோ, அசவுகரிகயமாக உணர்ந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

Tags:    

Similar News