கணவன்-மனைவிக்குள் பிரச்சினை எதனால்...?
- இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
- கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.
இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.
வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.
திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.
திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.
கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.
எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.
அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.