பெண்கள் உலகம்

பெண்களுக்கு தொழிலில் ஏற்படும் நெருக்கடியும்... சமாளிக்கும் வழிமுறையும்...

Published On 2023-07-17 04:49 GMT   |   Update On 2023-07-17 04:49 GMT
  • நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
  • பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

பெண்களுக்கு குடும்பத்திலும் தொழிலிலும் எதிர்பாராத விதமாக நிதி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை சமாளிப்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்திருப்பது நன்மை தரும். பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

நிதி திட்டமிடல்

எந்த செயலில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கான நிதி திட்டமிடல் என்பது முக்கியமானது. எப்போதும் பட்ஜெட்டை விட சிறிது கூடுதலாகவே நிதியை இணைத்து திட்டமிட வேண்டும். தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டமிடும் போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மற்றவர் உதவியின்றி தீர்வு காண முடியும். இதுவே தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை தகுதியாகும்.

அவசரகால நிதி

தொழிலை பொறுத்தவரை அவசர கால நிதியை தனியாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச்செலவு, உபகரணங்கள் சேதமடைதல் எதிர்பாராத விபத்து, தொழில் இழப்பு என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நிதி உதவும். இந்த நிதியை எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர கால நிதிக்கென வங்கியில் தனி கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். அதன் மூலம் வட்டித்தொகையும் கூடுதலாக கிடைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும்.

கடனை திருப்பி செலுத்துதல்

யாராக இருந்தாலும் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு அடிப்படையாக கடன் பெறுவது இயல்பானது. இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பி செலுத்துதல் அவசியமானது. கடனைக்கண்டு கொள்ளாமல் விடும்போது மொத்தமாக செலுத்தும் நெருக்கடி ஏற்படலாம். இதனால் நிதி சுமையை சமாளிக்க முடியாமல் தவிப்புகுள்ளாகலாம். எனவே முடிந்தவரை கடனை அவ்வப்போது திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்துவதன் மூலம் கடனுக்கான தரவரிசை அங்கீகாரத்தைபெற முடியும்.

முதலீடுகள் அவசியம்..

எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சிறந்த வழி முதலீடு செய்வதாகும். தொழில் தொடங்கும் போதே முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும். நிதி நெருக்கடி என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது. கடன் பெறுவது மட்டுமின்றி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றாலும் அதனை சமாளிக்க முடியும்.

பிரச்சனையின் தீவிரத்தை உணருதல்

நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்பு பிரச்சனையின் தீவிரத்தை உணர வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை தகுந்த ஆலோசகரிடம் கேட்டு சரியான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலை பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதுடன் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும்.

சந்தைப்படுத்தும் உத்தி

நிதி நெருக்கடியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதுடன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தியையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

Tags:    

Similar News