பெண்கள் உலகம்

பெண்களின் மீதான வன்முறை தொலையாதா?

Published On 2023-07-26 04:27 GMT   |   Update On 2023-07-26 04:27 GMT
  • தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது.
  • குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.

உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

பெரும்பாலும் இத்தகையவன்முறைகள், 90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது.

இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர்.

உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது. வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது.

நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை. ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன.

திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன. மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன.

மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும்.

Tags:    

Similar News