பெண்கள் உலகம்

பெண்களே நிறத்தைப் பற்றிய கவலை இனி வேண்டாம்...

Published On 2022-06-21 05:03 GMT   |   Update On 2022-06-21 05:03 GMT
  • தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர்.
  • தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும்.

'சிவப்பழகுதான் அனைவரையும் ஈர்க்கும். கருப்பாக இருப்பது அழகு அல்ல' என்று சருமத்தின் நிறத்தை தங்களின் அடையாளமாக எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொள்ளும் பெண்கள் பலர் உள்ளனர். தனது நிறத்தை பற்றி ஆண்களை விட, பெண்கள்தான் அதிகமாக கவலைப்படுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அங்கு இருப்பவர்களின் சரும நிறமும் வேறுபடுகிறது.

நமது நாடு வெப்பம் நிறைந்தது என்பதால், இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதாகவே நம்முடைய நிறம் அமைந்துள்ளது. தனது ஆளுமையை உயர்த்திக் காட்ட நினைக்கும் பெண்களில் பலர், தங்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர முடியாமல் போவதற்கு நிறம் ஒரு தடையாக உள்ளது என்று நினைக்கின்றனர். அவ்வாறு கருதுவதால் அவர்களை அறியாமலே தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. அதுவே அவர்கள் நினைத்த இலக்கை எட்ட முடியாதவாறு தடுத்துவிடுகிறது.

அதிகமான நிறங்களை வகைப்படுத்துவதில் ஆண்களை விட, பெண்கள் சிறந்தவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் பல வண்ணங்களில் ஆடை அணிய வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கூட, 'தன் நிறம் கருப்பு, அதனால் இந்த நிறம் பொருந்தாது, அந்த நிறம் பொருந்தாது' என்று தானாகவே ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு, குறிப்பிட்ட நிறங்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அணிகிறோம். இது பல இடங்களில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

தன்னை அழகாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள், முதலில் 'தான் அழகு' என்பதை நம்ப வேண்டும். நம் தோற்றம், நம்மை விட மற்றவருக்கு 20 சதவீதம் கூடுதல் அழகாகத் தெரியும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

அழகான தோற்றத்துக்கான ஆலோசனைகள்:

1. நிறத்திற்கு தகுந்த ஆடை அணிவதைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நாகரிகமான ஆடையை அணிய பழகுங்கள். அவ்வாறு அணியும்போது உங்களை அறியாமலே மகிழ்ச்சி கூடும். அது தானாகவே உங்கள் முகத்தில் புன்முறுவலையும், மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்தும் பாராட்டு பெறுவீர்கள்.

2. அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்குப் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகரியம் ஏற்படாது.

3. எப்பொழுதும் புன்னகையை முகத்தில் தவழ விடுங்கள். புன்னகையே பல சமயம் சிறந்த அலங்காரமாகும்.

4. நிறத்தை பற்றிய கவலையை விடுத்து, உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை முழுமையாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பழகத் தொடங்குங்கள்.

5. தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. உங்கள் நிறத்தைப் பற்றிய விமர்சனத்தை யாராவது முன் வைக்க நேர்ந்தால், சற்றும் தளராமல் 'அது ஒரு குறை அல்ல' என்று ஆணித்தரமாக உணர்த்துங்கள். நாளடைவில் உங்களை விமர்சித்த கூட்டம் குறைந்து, உங்களை முன்மாதிரியாக பின்பற்றும் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

Tags:    

Similar News