செய்திகள்

விஜயகாந்த் முதல்-அமைச்சரானால் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: பிரேமலதா பேச்சு

Published On 2016-05-02 06:26 GMT   |   Update On 2016-05-02 11:38 GMT
விஜயகாந்த் முதல்-அமைச்சரானால் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரேமலதா பேசினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் தே.மு.தி.க.-த.மா.கா. மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

சேந்தமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் போது அவர் பேசியதாவது:–

விஜயகாந்தின் கனவு திட்டமான ரேஷன்பொருட்களை வீடுதேடி வழங்க முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

ஒரு பெரிய நடிகரே பேட்டியில் பணம் வாங்குபவர்களும் திருடர்கள் தான். பணம் கொடுக்கும் திருடர்களை ஏன் தலைவராக ஆக்குகிறீர்கள் என சொல்லி உள்ளார்.

விஜயகாந்த் முதல்– அமைச்சரானால் பெண்கள் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

பின்னர் எருமப்பட்டி, பொத்தனூர், ஜேடர் பாளையத்தில் பிரசாரம் செய்தார். அதன் பிறகு குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவுரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

கடந்த 50 ஆண்டுகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைய நீங்கள் உதவவேண்டும். லஞ்ச லாவண்யம் இல்லாத, ஊழலற்ற ஆட்சி நிர்வாகம் எங்கள் ஆட்சியில் இருக்கும். படித்த, படிக்காத அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் அரசாக எங்கள் அரசு அமையும். நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டுக்களை விற்று விடாதீர்கள். மற்றவர்களையும் ஓட்டுகளை விற்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு அரசுகளையும் நீக்குவதற்காக புனிதபோர் நடைபெற்று கொண்டிருக்கிறது. நமது முரசு நாளைய தமிழக அரசாக அமைய வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

Similar News