செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்து நிற்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-10-13 09:06 GMT   |   Update On 2016-10-13 11:31 GMT
அனைத்து கட்சிகளும் தங்களுடைய சுய பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசால் தேசிய நதிநீர் கட்டுப்பாடு மசோதா கொண்டு வர இருக்கிறது. அதனுடைய அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை.

ஆனால் நிச்சயமாக காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்யாது.

ஒரு சந்தோ‌ஷமான வி‌ஷயம். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்றைய தினம் தன்னுடைய கட்சியின் தலைவர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடலாமா என்று கேட்டு இருக்கிறார்.

அதில் 99 சதவீதம் பேர் தனித்து போட்டியிடலாம் என்று கருத்து சொல்லி இருப்பது அவர்களுடைய கட்சி விவகாரம். ஆனாலும் வரவேற்கத்தக்கது. இதை தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி இருக்கிறேன்.

அனைத்து கட்சிகளும் தங்களுடைய சுய பலத்தை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.

குளச்சல் துறைமுகம் எக்காரணத்தை கொண்டும் தடைப்படாது. கண்டிப்பாக தமிழக மக்கள் நலன் கருதி குளச்சல் துறைமுகம் கொண்டு வரப்படும். இதற்கு ஆரம்பத்தில் இருந்தே நெடுமாறன் ஆதரவு தெரிவித்து வருகிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News