செய்திகள்

1017 பேர் பயனடையும் வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Published On 2017-07-26 08:24 GMT   |   Update On 2017-07-26 08:24 GMT
1,017 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் ஆகியவற்றை வழங்கினார்.

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து எளிதில் வெளியிடங்களுக்கு சென்று வர ஏதுவாக 2016-2017ஆம் நிதியாண்டிற்கு 5 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1,017 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 மாற்றுத்திறனாளிகளுக்குவழங்கி துவக்கி வைத்தார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒளிரும் மடக்குக் குச்சிகளுக்கு மாற்றாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அதிக தூரத்தில் உள்ள பொருட்களையும் அதிர்வு மூலம் உணர்ந்து தங்கு தடையின்றி பயணிக்க ஏதுவாக 1 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 5000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, 5 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நவீன ஒளிரும் மடக்குக் குச்சிகளை வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிடும் திட்டத்தின் மூலம் தேசிய அளவில் மாற்றுத் திறனாளிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதோடு, மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பெற்று பயன் பெற முடியும்.

இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தினை, தமிழ்நாட்டில் துவக்கி வைக்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை வழங்கினார்.
Tags:    

Similar News