அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து 2 மாதமாக ஆலோசனை நடத்தி வந்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் கோஷ்டி பிரச்சினைகளை கேட்டுக் கொண்டதுடன், கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
கட்சியில் குழப்பம் விளை விப்பவர்கள், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சிக்கு பாடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் மரியாதை கிடைக்கும் என்று உறுதிபட கூறினார்.
மாவட்ட வாரியான கூட்டம் முடிந்த நிலையில் மாநில அளவில் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை மகளிர் அணி மற்றும் மகளிர் பிரசார குழு தொண்டர் அணி நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நிர்வாகிகள் ஹெலன் டேவிட்சன், விஜயா தாயன்பன், கீதா ஜீவன், தமிழரசி, குமாரி உள்பட 25-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிரணியினரின் குறைகளை கேட்டறிந்த பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வ கருத்துக்களை மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில நிர்வாகிகளை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
இதில் மாநில செயலாளர் மஸ்தான், மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இவர்களிடம் கட்சியில் நிலவும் பிரச்சினைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் உங்கள் குறைகளை நான் களைகிறேன். நீங்கள் கட்சிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் வகையில் உங்கள் உழைப்பு இருக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, மருத்துவர் அணியுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.