ஆன்மிக அமுதம்: காகங்கள்- முன்னோரின் பிரதிநிதிகள்- 50
காகம் என்ற பறவை நம் ஆன்மிகத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நம் முன்னோர்கள், நாம் அவர்களுக்கு அளிக்கும் படையலைக் காக்கை வடிவில் வந்து ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை.
நம் முன்னோர்களுக்குப் படையல் வைக்கும்போது, அவர்களைப் பற்றிய நினைவுத் துயரில் நாம் ஆழ்ந்திருப்போமே? நம் துயரில் தாமும் பங்கு கொள்வதை அறிவிக்கத் தானோ காகங்கள் கறுப்பு நிறத்தில் தென்படுகின்றன?
அமாவாசையன்று காக்கைக்குச் சோறு வைக்கும் பழக்கம் நம்மில் பலரிடம் உண்டு. நாள்தோறும் காகத்திற்குச் சோறிடுபவர்களும் உண்டு. ஆண்டுதோறும் நடக்கும் நீத்தார் நினைவு நாளில் தவறாமல் காக்கைக்குச் சோறு வைக்கப்படும்.
பொங்கலை ஒட்டிக் கனுப்பொங்கலன்று சகோதரர்களின் நலனுக்காக வேண்டிக் கொண்டு மஞ்சள் செடியின் இலையில் காக்கைகளுக்கு விருந்து படைக்கும் வழக்கமும் இருக்கிறது.
வாழும்போது மனிதன் இந்தப் புவியைப் பலவகைகளில் மாசு படுத்துகிறான். கண்ட இடத்தில் குப்பை போடுவது, உமிழ்நீரைத் துப்புவது போன்ற அவன் செயல்கள் இந்த உலகத்தின் தூய்மையைக் கெடுக்கின்றன. எனவேதான் அவன் காக்கையாகப் பிறக்குமாறு விதிக்கப்படுகிறான் போலும்.
முந்தைய பிறவியில் தான் அசுத்தம் செய்த பூமியைக் காக்கையாக மாறி அடுத்த பிறவியில் அவன் சுத்தம் செய்கிறான் போலிருக்கிறது. செத்த எலி முதல் மண்ணில் விழும் எல்லா அழுக்குகளையும் உண்டு இந்த பூமி சுத்தமாக இருக்கக் காக்கைகள் செய்யும் சேவை குறிப்பிடத் தக்கதல்லவா? அதனால்தானே அவை `ஆகாயத் தோட்டி` என அழைக்கப் படுகின்றன?
*ஒருபக்கம் தலைசாய்த்துப் பார்க்கிற காக்கைக்கு ஒற்றைக் கண்தான் என நாம் எண்ணுகிறோம். அந்த ஒற்றைக் கண்ணுக்கான காரணத்தைச் சொல்கிறது ராமாயணத்தில் உள்ள ஒரு கதை. சீதாதேவி மேல் ராமபிரான் வைத்திருந்த காதலின் தீவிரத்தைப் புலப்படுத்தும் கதை அது.
இந்திரனின் மகன் ஜெயந்தன் காகாசுரனாகக் காக்கை வடிவில் வந்து சீதாதேவியின் அங்கத்தைக் கொத்துகிறான். அப்போது சீதை மடியில் தலைவைத்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார் ஸ்ரீராமர். அவர் கண்விழித்தும் காகம் செய்யும் செயலைக் காண்கிறார். கடும் சீற்றமடைகிறார். ஆனால் அவர் கையில் அப்போது வில் இல்லை.
அதனால் என்ன? நிலத்தில் இருக்கிற ஒரு புல்லை எடுக்கிறார். மந்திரம் ஜபித்து, அந்தப் புல்லைக் காகத்தின் மேல் வீசுகிறார். `வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்` என்ற பழமொழி இந்த நிகழ்ச்சியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.
அந்தப் புல் காகாசுரனைப் போகுமிட மெல்லாம் விடாமல் துரத்துகிறது. காகம் பறந்து பறந்து வானத்து தேவர்களிடமெல்லாம் தன்னைக் காப்பாற்றுமாறு உதவி வேண்டுகிறது. சிவபெருமானிடமும் பிரம்மதேவனிடமும் கூடச் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறது.
யார்தான் மாவீரரான ராமபிரானைப் பகைத்துக் கொள்ள முன்வருவார்கள்? தான் உதவி கேட்டு நாடிச் சென்ற அனைத்துத் தேவர்களையும் விட வலிமையானவர் ராமபிரான் என்ற உண்மையை உணர்ந்துகொள்கிறது காகம்.
மீண்டும் மண்ணுலகம் வருகிறது. பிராட்டியின் கருணையிருந்தால் தான் காப்பாற்றப் படுவோம் என நினைக்கிறது. சீதாதேவியின் பாதங்களில் தலைவைத்து வணங்கித் தன் செயல் குறித்து மன்னிப்புக் கேட்கிறது.
கருணையே வடிவானவள் அல்லவா அன்னை சீதை? காகத்தின் தலையை ராமபிரானை நோக்கித் திருப்பி வைக்கிறாள் அவள். அன்னை பரிந்துரைத்தால் அடைக்கலம் கொடுக்காமல் இருக்க முடியுமா?
ஆனால் ராமபாணம் இலக்கின்றித் திரும்பாதே? யோசித்த ராமன் காக்கையின் ஒரு கண்ணை மட்டும் கவர்ந்து காகத்தை மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தான் என்கிறது ராமாயணக் கதை.
சீதாப்பிராட்டி சுந்தரகாண்டத்தில் இந்நிகழ்ச்சியை நினைத்துப் பார்ப்பதாக எழுதுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்தநாள்
காகம் முற்றும் ஓர் கண்இல ஆகிய
வேக வென்றியைத் தன்தலை மேல்கொள்வாள்.`
*சீர்காழியில் சிவபூஜை செய்து கொண்டிருந்தான் இந்திரன். அந்த பூஜைக்குத் தேவையான மலர்களைப் பெறும் பொருட்டு மிகப் பெரிய நந்தவனம் ஒன்றைப் பராமரித்து வந்தான்.
ஆனால் அவன் பூஜைக்குப் போதுமான மலர்கள் கிட்டவில்லை. காரணம் அந்தப் பிரதேசத்தில் கடும் நீர் வறட்சி இருந்ததால் நந்தவனச் செடிகள் பூக்கவில்லை. என்ன செய்வதென நாரத மகரிஷியிடம் கேட்டான் இந்திரன்.
‘அகத்தியர் வைத்திருக்கும் கமண்டலத்தைத் தட்டிவிட்டால் அதில் உள்ள நீர் பெருகி நதி தோன்றும், அந்த நதி ஓடிவரும்போது அந்தப் பிரதேசம் முழுவதும் வளம் பெற்று நந்தவனம் மலர்களைச் சொரிய ஆரம்பிக்கும். அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விடுமாறு நீ விநாயகப் பெருமானை வேண்டு!` என யோசனை கூறினார் நாரத மகரிஷி.
இந்திரன் பிள்ளையாரை மனமுருகி வேண்ட, தன் தந்தை சிவபெருமானின் பூஜைக்கு மலர் கிடைக்கும்பொருட்டு விநாயகப் பெருமான் காகமாக உருமாறினார். அகத்தியர் இருக்குமிடம் தேடிப் பறந்து சென்றார்.
அவர் கீழேவைத்த கமண்டலத்தைத் தன் தட்டுத் தட்டிவிட்டார்.
ஆச்சரியம்! கமண்டல நீர் கரைபுரண்டு பெருக்கெடுத்து நதியாக மாறி கடகடவென ஓடத் தொடங்கியது. காகம் தட்டிய நீர் விரிந்து பரவியதால் அந்த நதி `காவிரி` என அழைக்கப்பட்டது. காவிரி நதி தோன்றிய கதை இதுதான்.
`யார் என் கமண்டலத்தைத் தட்டிவிட்டது` எனக் காகத்தை அகத்தியர் சினம்கொண்டு பார்த்தபோது காகம் விநாயகப் பெருமானாகக் காட்சி தந்தது. விநாயகரைப் பணிந்து வணங்கினார் அகத்தியர் என்கிறது அகத்திய புராணம்.
*நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு வாகனம் உண்டு. சூரியனுக்கு மயில், சந்திரனுக்கு குள்ளநரி, செவ்வாய்க்கு அன்னம், புதனுக்கு குதிரை, வியாழனுக்கு யானை, சுக்கிரனுக்கு கருடன், ராகுவுக்கு ஆடு, கேதுவுக்கு சிங்கம்.
நவக்கிரகங்களில் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் கிரகமான சனி பகவான் காக்கையை வாகனமாக உடையவர். அதனால் காகத்திற்கு நாள்தோறும் உணவளிப்பதன் மூலம் சனியின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையும் நம்மிடையே உண்டு.
*காகபுஜண்டர் காக வடிவில் வாழ்ந்த முனிவர். அவர் சித்தர்களில் ஒருவர். அரிய கருத்துகளைச் சொல்லும் பல தமிழ்ச் செய்யுள்களை இயற்றியுள்ளார். தாம் காகத்தின் வடிவைப் பெற்று இந்தச் செய்யுள்களை அருளியதாக அவரே தம் பாடல்களில் கூறியுள்ளார்.
இவர் மயிலாடுதுறையில் பிறந்தவர் என்றும் மயூரநாதரின் அருளால் சாகாவரம் பெற்றுக் காக்கை வடிவில் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.
*மகாகவி பாரதியார் காக்கையைத் தன் ஜாதி என்கிறார். `காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்` என்று பாடுகிறார். கண்ணன் கரிய நிறத்தவன் ஆயிற்றே? `காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா` என்று கண்ணனின் நிறத்தைப் போற்றுகிறார்.
`எத்தித் திரியும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா` எனக் குழந்தைகளிடம் காக்கை போன்ற பறவைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும் என்று பாப்பாப் பாட்டில் அவர் போதிக்கிறார்.
*காகங்கள் கா கா என்று ஏன் கரைகின்றன? இதுபற்றி ஓர் அழகான கற்பனையைத் தம் மனோன்மணீயம் என்ற செய்யுள் நாடகத்தில் எழுதுகிறார் சுந்தரம் பிள்ளை. `நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்` எனத் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் ஆசிரியரான அதே சுந்தரம் பிள்ளைதான்.
சூரியன் உதித்ததும் அதிகாலையில் கண்விழிக்கின்றன காகங்கள். கறுப்பாய் இருக்கும் இருட்டை அழித்துக் கொண்டு சூரியன் கீழ்த் திசையில் தோன்றுவதை அவை பார்க்கின்றன. கறுப்பாய் இருக்கும் தங்களையும் இருட்டு எனக் கருதி சூரியன் அழித்து விட்டால் என்ன செய்வது என அவை பதற்றமடைகின்றன.
`நாங்கள் இருட்டின் துண்டுகள் அல்ல, காகங்கள், பறவைகளான எங்களை இருட்டை அழிப்பதுபோல் அழித்துவிடாதே, காப்பாற்று` என்று தெரிவிக்கும் கண்ணோட்டத்தில் `கா கா, காப்பாற்று காப்பாற்று!` எனக் காகங்கள் குரல் கொடுக்கின்றனவாம். கறுப்புக் காகங்களைப் பற்றிய சுந்தரம் பிள்ளையின் சுந்தரமான கற்பனை இது.
*ஒருவரைப் புகழ்ந்து தனக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்வதைக் காக்காய் பிடித்தல் என்கிறோம். காக்காயைப் பிடிப்பதற்கும் ஒருவரைப் புகழ்வதற்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சம்பந்தமும் இல்லை. `கால் கை பிடித்தல்` என்பதே `காக்காய் பிடித்தல்` என மருவியிருக்க வேண்டும் என்கிறார் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன்.
அதுபோலவே காக்காய் வலிப்பு என்றொரு வியாதி இருக்கிறது. அதற்கும் காக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. `கால்கை வலிப்பு` என்பதே காலப் போக்கில் காக்காய் வலிப்பு ஆகிவிட்டது.
`காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது, காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு` என்பன போன்ற பழமொழிகளும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளன. கஞ்சக் கருமிகளை `அவன் எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவன்` என்கிறோம். எச்சில் கையால் காக்காயை விரட்டினால் அந்தக் கையிலிருந்து பருக்கை உதறி விழ அதைக் காக்காய் தின்பதுகூட அவனுக்குப் பிடிக்காதாம்.
காக்கை என்ற பறவை நம் ஆன்மிக வாழ்வில் நம்முடன் பறந்து வந்துகொண்டே இருக்கிறது. கொக்கு, கிளி, மயில் போன்ற பறவைகள் காகங்களை விட அழகாக இருக்கலாம். ஆனால் நம் அன்றாட ஆன்மிகத்தில் காகங்களைப் போல் அவற்றிற்கு எந்த இடமும் இல்லை.
அந்த வகையில் காக்கைகள் மற்ற எல்லாப் பறவைகளையும் விடத் தனிப் பெருமை பெற்றுவிடுகின்றன.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com