உள்ளூர் செய்திகள்

பாளையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படையினர் 2-வது நாளாக ஆந்திராவில் முகாம்

Published On 2022-07-10 09:41 GMT   |   Update On 2022-07-10 09:41 GMT
  • சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் துரை ஓட்டி வந்த காரை பின் தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த கும்பல் இதுபோன்று மேலும் சில இடங்களில் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

நெல்லை:

பாளை மகாராஜாநகரை சேர்ந்தவர் தி.மு.க. பிரமுகர் பரமசிவ அய்யப்பன். இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் பரமசிவ அய்யப்பன் கூறியதின் பேரில் துரை பாளையில் உள்ள 2 வங்கிகளில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.17 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் துரை ஓட்டி வந்த காரை பின் தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்கள் ஆந்திராவுக்கு தப்பி சென்றதையும் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு 2-வது நாளாக முகாமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த கும்பல் இதுபோன்று மேலும் சில இடங்களில் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவர்களை கைது செய்யும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News