இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிப்பு- 31.5 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம்
- நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள்.
- தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னை:
இந்தியாவில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுக்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 20 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழான லான்செட் இதழில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கிறார்கள். நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், ஆரம்ப நிலை பாதிப்பு 15.3 சதவீதம் பேருக்கும் உள்ளது. தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவா, சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறைவான பாதிப்பே உள்ளது. நகர்ப்புறங்களில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் நகரங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்களிடையே அதிக வித்தியாசம் இல்லை.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தால் 31.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 35.5 சதவீதம் ஆகும். உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டோரில் 5 சதவீதம் பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள்.
மேலும் பொதுவான உடல் பருமனால் 25.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் வயிற்று பருமனால் 35.1 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடல் பருமனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பாதிப்பு புதுச்சேரியில்தான் அதிகமாக உள்ளது.
21.3 கோடி பேர் அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18.5 கோடி பேர் அதிக கெட்ட கொழுப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுபோன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளன.