கொள்ளிடம் ஆற்றங்கரையில் 12 அடி நீள முதலை: வனத்துறையினர் மீட்பு
- ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
- ஆற்றங்கரை பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகர நல்லூர், வல்லம்படுகை, வேளக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ளன.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள், கால் கழுவச் செல்பவர்களை, முதலைகள் கடித்து இழுத்து செல்கின்றன. இதனை தடுக்கும் வகையில் முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள காட்டுக்கூடலூர் கிராம மக்களை பெரிய முதலை ஒன்று அச்சுறுத்தி வந்தது.
இந்த நிலையில் ஆற்றின் கரையில் கால் கழுவ சிறுவன் சென்றான். அப்போது ஆற்றங் கரையில் பெரிய முதலை ஒன்று படுத்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டபடியே அலறி அடித்து ஓடினான்.
தகவல் அறிந்த கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கிருந்த சுமார் 400 கிலோ எடையும் 12 அடி நீளமும் கொண்ட முதலையின் கால்கள் மட்டும் வாயை கட்டினர். பின்னர் முதலையை தூக்கி மினி லாரியில் வைத்து எடுத்து சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் கொண்டு வந்து கொடுத்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்கத்தில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.