உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் போராட்டம்

Published On 2024-11-22 06:37 GMT   |   Update On 2024-11-22 06:37 GMT
  • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சி பெருமாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 52 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இன்றி ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அந்த ஆசிரியரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதையடுத்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த பள்ளிக்கு தற்காலிகமாக 2 ஆசிரியர்களை நியமித்து தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதிலும் ஒரு ஆசிரியர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாக கூறி இன்று பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- இந்த பள்ளிக்கு என்று நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தது ஒரு ஆண்டுக்காவது மாற்றப்படாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படும். அடிக்கடி ஆசிரியர்கள் மாற்றப்படுவதாலும் நிரந்தரமாக ஆசிரியர் இல்லாததாலும் மாணவர்களின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாக உள்ளது. அதேபோல் பள்ளிக்கென புதிதாக கான்கிரீட் கட்டிடம் கட்டிதர வேண்டும். தற்போது ஓட்டு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

மேலும் பள்ளிவளாகத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக தேவையான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது பற்றி தெரியவந்ததும் நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News