தமிழ்நாடு

துரைப்பாக்கத்தில் சதுப்பு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய 47 வீடுகள் இடிப்பு

Published On 2024-11-22 08:30 GMT   |   Update On 2024-11-22 08:30 GMT
  • சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது.
  • வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார்.

சோழிங்கநல்லூர்:

துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், வி.பி.ஜி. அவென்யூ மகாலட்சுமி நகர் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இதனை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளு டன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் வீடுகளை இடிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்மா, பன்னீர்செல்வம், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கைதான அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News