சனாதனம் வேறு... கடவுள் நம்பிக்கை வேறு- திருமாவளவன்
- சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது.
- ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சனாதனம் வேறு... கடவுள் நம்பிக்கை என்பது வேறு.
கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இது சாதாரண மக்களுடைய உணர்வுகள். சாதாரண மக்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்களை போன்றவர்களது கடமை.
தேவாலயத்திற்கு அழைக்கின்றபோது நாங்கள் அங்கு செல்கிறோம். மசூதிகளுக்கு அழைக்கின்றபோது அங்கே செல்கிறோம். இதேபோன்று ஏராளமான தோழர்கள் கோவில்களுக்கு அழைக்கிறார்கள். கோவில்களுக்கும் செல்கிறோம். இது உணர்வுகளை மதிக்கிற ஒரு நிலைப்பாடு அவ்வளவு தான்.
சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது. ஆண்கள் மேலானவர்கள். பெண்கள் கீழானவர்கள். வருண அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட வர்ணம் மேலானது. மற்ற வர்ணங்கள் கீழானவை என்று போதிக்கின்ற அந்த முறையும் அதை நம்புகின்ற நடவடிக்கைகளும் தான் விமர்சனத்திற்கு உரியவை. அவற்றை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதைத்தான் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.
மக்களுடைய உணர்வுகள், நம்பிக்கைகள் அவரவருக்கானது. ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பழனிக்கு சென்று இருந்தபோது இயக்க தோழர்கள் விடுத்த அழைப்பை ஏற்று 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மலைக்கு சென்று வந்து இருக்கிறேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை என்று நம்புகிறேன் என்று கூறினார்.