கடலூரில் கடல் சீற்றம்- படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள்
- மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
- கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.
கடலூர்:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
நவம்பர் 25-ந்தேதி முதல் பருவமழை வலுவடையும். 26 மற்றும் 27-ந் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் , கடலில் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் நேற்று முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தற்போது கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் தாழங்குடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக முன்னோக்கி கடல் அலை சுமார் 50 அடிக்கு வந்து செல்வதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர். இது மட்டுமின்றி அதிகளவில் கடல் சீற்றம் ஏற்பட்டால் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டு விடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் கடற்கரை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.