உள்ளூர் செய்திகள் (District)

அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை

Published On 2023-11-25 09:50 GMT   |   Update On 2023-11-25 09:50 GMT
  • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
  • மர்ம நபர்கள் கைவரிசை

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேசெட்டி அள்ளி அருகே உள்ள சின்ன கம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் (வயது 59). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். 23-ந் தேதி மதியம் தனது அண்ணன் மணி என்பவர் போன் மூலம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்து தயாளன் பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தயாளன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அதே பகுதியில் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் சிலம்பரசன் (37). இவர் பெங்களூரில் பழைய இரும்பு கடை தொழில் செய்து வருகிறார். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

சிலம்பரசன் கடந்த 11-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். பண்டிகை முடித்து கடந்த 17-ந் தேதி பெங்களூர் சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் 23-ந் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து நேற்று சிலம்பரசன் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை குறித்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

குறிப்பாக பாப்பாரப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வயதான பெண்களை குறி வைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், தற்பொழுது பூட்டிய வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வருவது தொடர்ந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு அச்சப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News