உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் அலுவலகம்-அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் மனிதக் கழிவு வீச்சு- 2 பேர் கைது

Published On 2023-11-25 06:53 GMT   |   Update On 2023-11-25 06:54 GMT
  • ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.
  • கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

கோவை:

கோவை ஒண்டிபு தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி(வயது61). இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் இவர் கோவை மாநகராட்சியின் 56-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(39). இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார்.ஆனால் இவர் அந்த பொதுக்கழிப்பிடத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றும், பராமரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திக்கு புகார் வரவே அவர், ஒப்பந்ததாரர் பிரகாசிடம், சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனாலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து கவுன்சிலர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்ததோடு, மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பாக புகார் வைத்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர் பிரகாசுக்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மீது கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தனது நண்பரான மற்றொரு ஒப்பந்ததாரர் ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து கொண்டு கோவை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு மனித கழிவை வீசி சென்றார்.

இதேபோல், சிங்காநல்லூர் மசக்காளிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ள பன்னீர்செல்வம் என்பவரது வீட்டின் முன்பு மனித கழிவை வீசியுள்ளனர்.

இதுதொடர்பாக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் அ.தி.மு.க கிளை செயலாளர் வீட்டின் முன்பு மனித கழிவை வீசி சென்ற கழிவறை சுத்தம் செய்யும் ஒப்பந்ததாரர்களான பிரகாஷ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து பிரகாசிடம் மனித கழிவுகளை வீசியது குறித்து விசாரித்தனர். அப்போது, அ.தி.மு.க. கிளை செயலாளரான பன்னீர்செல்வத்திடம் நான் வேலை பார்த்தபோது அவர் தனக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்றும், காங்கிரஸ் கவுன்சிலர் தன் மீது புகார் தெரிவித்த ஆத்திரத்தில் தனது நண்பருடன் சேர்ந்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News