திண்டுக்கல்: வீடுபுகுந்து பணம் திருடிய 2 பேர் கைது- கார், ரொக்கப்பணம் பறிமுதல்
- வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
- சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.