காட்டுப்புத்தூர் அருகே வாலிபர் கொலையில் 2 பேர் கைது
- இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக காட்டுப்புத்தூர் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் பாரதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்து போனவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கஸ்தூரிபாய் புரம், கோவில் தெரு காமாட்சி மகன் பாலகிருஷ்ணன் (வயது 24) என தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் பாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது தெரியவந்தது. பாலகிருஷ்ணனும், அவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய இருவரும் கரூர் அருகே உள்ள மோகனூரில் தங்கி பர்னிச்சர் வேலை செய்து வந்தனர். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்தது. சம்பத்தன்று 2 பேரும் மோகனூர் டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அருகே தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி உள்ளனர். இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பாலகிருஷ்ணன் மற்றும் ரமேஷை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி டாஸ்மார்க் கடை அருகே உள்ள பாலத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் பாலத்தின் கீழ் சென்று மயங்கி விழுந்து இறந்தார். ரமேஷ் அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனங்களின் உதவியுடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிக்க தொட்டியம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா மேற்குவார் பட்டி ராமர் கோவில் தெருவை சேர்ந்த தாசில்ராஜா மகன் சதீஷ்குமார் (21), மலைச்சாமி மகன் புவனேஸ்வரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்பு உடைய மேலும் 6 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.