உள்ளூர் செய்திகள்

ஆம்னி வேனில் 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2024-11-16 06:07 GMT   |   Update On 2024-11-16 06:24 GMT
  • சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

சிவகிரி:

கோவை மண்டலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் படி, ஈரோடு சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த ஆம்னிவேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, வி.அருக்கம்பாளையம், போற காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி(34), திருப்பூர் மாவட்டம் முத்தூர் ரோடு அரிமொழி நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேசன் அரிசியை ஒத்தப்பனை, தாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாங்கி 3 ரோடு எம்மாம்பாளையம் பகுதியில் உள்ள நார் மில் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக வாங்கி ஆம்னி வேனில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து.

இதனையடுத்து ரவி மற்றும் சுரேஷை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News