டீசல் மீதான வரி விதிப்பை கைவிட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கை ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
- தி.மு.க. அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வழிகாட்டி மதிப்பு, பதிவுக் கட்டணம், வாகன வரி, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரியை எதிர்க்கும் தி.மு.க., மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று கோருகின்ற தி.மு.க., தற்போது தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாக பாதிப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். தி.மு.க. அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வரி விதிப்பு தி.மு.க. ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும். முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.