பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
- ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
- சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
வேங்கிக்கால்:
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கு பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்ததால் நகரமே திக்கு முக்காடியது. ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
14 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வலம் வருவதற்காகவும், அருணாசலேஸ்வரர் தரிசிக்கவும் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். வெயிலின் தாக்கம் இல்லாமல் அவ்வப்போது சாரல் மழையுடன் கூடிய இதமான சூழல் நிலவியது.
இதனால் நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அருணாசலேஸ்வரர் வலம் வந்தும், அருணாசலேஸ்வரரை கோவிலில் சாமி தரிசனம் செய்தும் சென்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க இரவு கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய சுமார் 6 முதல் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்களின் தரிசன வரிசை கோவில் வளாகத்தை கடந்து பெரிய தெரு வரை நீண்டிருந்ததால் பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இனி வரும் பவுர்ணமி நாட்களிலாவது கோவில் வளாகத்தில் உள்ள காலி இடங்களில் மேற்கூரை அமைத்து சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன வரிசையை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.