உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை தவிப்பு- ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Published On 2023-04-26 10:17 GMT   |   Update On 2023-04-26 10:17 GMT
  • குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது.
  • தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 10-வது பிளாட்பாரத்தில் 2 வயது ஆண் குழந்தை தனியாக நின்று தவித்துக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடனே குழந்தையை ரெயில் நிலைய மேலாளர் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை அணிந்திருந்த உடை, அங்க அடையாளம் பற்றி அறிவிப்பு செய்து பெற்றோரை தேடினார்கள். ஆனால் குழந்தையின் பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை பேட்டரி காரில் அமர வைத்து ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று பெற்றோரை தேடினார்கள். அப்போது 4-வது பிளாட் பாரத்தில் ஒரு குடும்பத்தினர், குழந்தையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர். பேட்டரி காரில் குழந்தை இருப்பதை பார்த்ததும் அது தங்கள் குழந்தை என்று ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தனர். அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தியபடி தாயிடம் ஓடிச் சென்றது.

விசாரணையில் குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது. குழந்தையின் பெயர் முகமது இக்ராம் குரோஷி.

உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 21 பேர் சென்னை வந்துள்ளனர். உறவினரை அனுப்பிவிட்டு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விரைவு ரெயில் மூலம் விஜயவாடா செல்வதற்காக காத்திருந்தபோது குழந்தை மாயமானது தெரியவந்தது. தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News