செய்திகள்

அதிகாரிகளை பார்த்ததும் லாரியில் கடத்தி வந்த மண்ணை நடுரோட்டில் கொட்டி சென்ற அதிமுக கவுன்சிலர்

Published On 2016-06-23 06:48 GMT   |   Update On 2016-06-23 06:48 GMT
திருவண்ணாமலையில் அதிகாரிகளை பார்த்ததும் நடுரோட்டில் மண்ணை கொட்டி சென்ற அ.தி.மு.க. கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காணப்படும் ஏரி, ஆறுகளில் அரசு அனுமதியின்றி லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் இரவு வேளைகளில் மண் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் கடந்த சில நாட்களாக நகரின் பல்வேறு இடங்களில் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோடு பகுதியை சேர்ந்த நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் திருப்பதி வெங்கடேசன் அவரது லாரியில் ஏரிமண் எற்றி வந்தார்.

இரவு 11 மணியளவில் டிப்பர் லாரியை போலீசார் சாலையோரமாக நிறுத்துமாறு கூறினர். அப்போது பின்னால் வந்த மாவட்ட கனிமவள அதிகாரிகள் லாரி முன்பாக காரை நிறுத்தி லாரியை சோதனையிட முயன்றனர்.

கனிமவள அதிகாரிகள் லாரியை சோதனையிட முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த திருப்பதி வெங்கடேசன் உடனடியாக லாரியை பின்னோக்கி வேகமாக இயங்கி காமராஜர் சிலை முன்பாக நடுரோட்டில் மண்ணை கொட்டினார். அவரை அதிகாரிகள் மடக்கினர்.

அப்போது ஏற்கனவே எனது லாரிகளை பிடித்து வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். நான் ஏரிமண் அள்ளக் கூடாதா என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த திருப்பதி வெங்கடேசன் மண்ணை நடுரோட்டில் கொட்டிவிட்டு சென்று விட்டார்.

இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்ட சுங்கதுறை துணை இயக்குனர் கலைச்செல்வம் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார். அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது. அரசு சொத்துக்கு இழப்பீடு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பதி வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். லாரியை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News