செய்திகள்

மனைவியை எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published On 2017-05-11 16:48 GMT   |   Update On 2017-05-11 16:48 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே மனைவியை எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரஅக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி(34). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். முனுசாமிக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முனுசாமி, குடி போதையில் கிருஷ்ணவேணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த முனுசாமி, கிருஷ்ணவேணியின் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இது குறித்து அப்போதைய உத்தனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து, முனுசாமியை கைது செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக முனுசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து முனுசாமியை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News