உலகம்

லீவே இல்லாமல் 103 நாட்கள் தொடர்ந்து வேலை செய்த ஊழியர்.. உறுப்பு செயலிழந்து உயிரிழந்த பரிதாபம்

Published On 2024-09-08 01:32 GMT   |   Update On 2024-09-08 04:44 GMT
  • பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்துள்ளார் அபாவ்
  • தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது

சீனாவில் 103 நாட்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்ற ஊழியர் உறுப்பு செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 வயதான அபாவ் [A'bao] என்று நபர் கிழக்கு சீனாவில் ஜென்ஜியாங்[Zhejiang] மாகாணத்தில் உள்ள சோசவுன் [Zhoushan] பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு [2023] பிப்ரவரி மாதம் காண்டிராக்ட் அடிப்படையில் பெயிண்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் முதல் மே வரை தொடர்ந்து 104 நாட்களுக்கு வேலை செய்து வந்த அபாவ் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று மட்டுமே உடம்பு சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு தனது டார்மெண்ட்ரியில் [ஷேரிங் அறையில்] ஓய்வு எடுத்துள்ளார். தொடர்ந்து வேலை செய்து வந்ததால் கடந்த மே 28 முதல் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அபாவ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் மூச்சுத்திணறலால் கடந்த ஜூன் 1 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

அவரின் உயிரிழப்புக்குத் தொடர்ச்சியாக வேலை வாங்கிய நிறுவனமே காரணம் என்று அபாவின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அபாவின் உயிரிழப்புக்கு நிறுவனமும் 20 சதவீதம் காரணமாக உள்ளது என்று கூறிய நீதிமன்றம் அபாவின் குடும்பத்துக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10,000 யுவான் உட்பட மொத்தம் 400,000 யுவான்[இந்திய மதிப்பில் சுமார் ரூ. 47,000 லட்சம்] நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிக வேலைப் பளு காரணமாக உயிரிழப்புகளும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஆர்வமின்மையும் ஏற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் அதிக வேலை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் கரோஷி எனப்படும் டிரண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Tags:    

Similar News