செய்திகள்

குடும்பத்துடன் போராட்டம் நடத்த போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு

Published On 2018-01-08 11:42 GMT   |   Update On 2018-01-08 11:42 GMT
தமிழக அரசு தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காத நிலையில் குடும்பத்துடன் போராட்டம் நடத்த உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். #TNBusStrike
சென்னை:

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுக்கு சரமாரியான கேள்விகளையும் எழுப்பினர். மேலும், போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

போராட்டத்தை கைவிடாவிட்டால் சஸ்பெண்ட் என்ற உத்தரவை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள்

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். எங்களின் கவனத்திற்கு வராமலேயே, கலந்து ஆலோசிக்காமலேயே ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனியும், அரசு தாமதித்தால் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

சட்டரீதியாக நோட்டீஸ் வழங்கிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 16 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது

பயிற்சி இல்லாத ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் அரசின் நடவடிக்கை ஆபத்தானது. இதனால், பல விபத்துகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு கூறினர்.
Tags:    

Similar News